Pages

Sunday, October 1, 2017

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு 


என்னடா இது , தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று பார்க்கிறீர்களா ? கல்லாதவனிடம் அறிவு எப்படி இருக்கும் ?

அது தான் சிக்கலே.

கல்வி அறிவு இல்லாத பலர்,  அறிவுள்ளவர்களைப் போல பேசுவார்கள்.  பல அரசியல்வாதிகள், போலி சாமியார்கள், என்று இன்று நாட்டில் எவ்வளவோ பேர் தங்கள் பேச்சு சாமர்த்தியத்தால் பெரிய அறிவுள்ளவர்களைப் போல காட்டிக் கொள்வார்கள்.

அப்பாவி மக்களும், அவர்களை நம்பி ஏமாந்து அவர்களுக்கு வோட்டுப் போட்டு விடுகிறார்கள், அவர்களை நம்பி பணம் காசை பறி கொடுக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் படித்த பண்டிதர் மாதிரி இருக்கிறதே. அவ்வளவு உறுதியாக, தெளிவாக பேசுகிறார்களே. எப்படி நம்பாமல் இருப்பது ? அறிவில்லாமலா அப்படி பேசுவார்கள் ?

சரியான கேள்வி தான்.

நீங்கள் கடற்கரைக்கு போய் இருக்கிறீர்களா ? அங்கே , மணலில் நண்டு அங்கும் இங்கும் ஓடும். சில சமயம், அந்த நண்டு ஓடிய மணல் கோடுகள் எழுத்து வடிவில் இருக்கலாம். ஒரு 'ட' போல, ஒரு 'ப' போல , ஒரு 'ர' போல இருக்கலாம். அதற்காக , அந்த நண்டுக்கு தமிழ் தெரியும் என்று நாம் நினைப்போமா ?

அது போல, அறிவில்லாத மடையர்கள் கூட சில சமயம் நன்றாக பேசி விடலாம். அதற்காக , அவர்கள் பெரிய அறிவாளிகள் என்று நினைத்து அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - அறிவுள்ளவர்கள்.


பாடல்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் 
கொள்ளார் அறிவுடை யார். 

பொருள்

கல்லாதான்  = கற்காதவன்

ஒட்பம் = அறிவுடைமை

கழியநன்று ஆயினும் = மிக நன்றாக இருந்தாலும்

கொள்ளார் = அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

அறிவுடை யார் = அறிவுள்ளவர்கள்

எனவே, ஒருவர் பேசுவதை மட்டும் வைத்து அவரை எடை போட்டு விடக் கூடாது. அதற்கு, நாம் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அது ஒன்றுதான் , ஏமாறாமல் இருக்க வழி. ***

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post.html

3 comments:

  1. அய்யா தங்களின் பதிவுகளை whatsapp மற்றும் facebookல் பகிர்ந்து வருகிறேன். தங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete
  2. நான் மிகவும் வுரும்பி எதிர்பார்து இருப்பது தங்களின் பதிவுகள். நன்றி 🙏🏽.

    ReplyDelete
  3. குறள் அருமைதான். அனால் உன் நண்டு உவமை அருமையிலும் அருமை!

    ReplyDelete