திருக்குறள் - வேலை செய்யும் வழி
எந்த ஒரு வேலையையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
என்னிடம் கேட்டால் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பேன். ஒழுங்காக செய்ய வேண்டும் என்பேன். விடா முயற்சியோடு செய்ய வேண்டும் என்பேன்.
வள்ளுவர் ஆயிற்றே. மிக மிக ஆழமாக சிந்தித்து சொல்கிறார்.
திட்டமிடுதல் என்றால் என்ன ? எதை திட்டமிட வேண்டும் ? எப்படி திட்டமிட வேண்டும் என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா ?
அதை எல்லாம் விளக்க ஒண்ணே முக்கால் அடி குறள் போதுமா ? சுருக்கமாகவும் சொல்ல வேண்டும். அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும், அது ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.
இதோ அந்தக் குறள்
பாடல்
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பொருள்
ஊறொரால் = ஊறு + ஒரால் = ஊறு என்றால் தடை. துன்பம். ஒரால் என்றால்
நீக்குதல், விலக்குதல்
உற்றபின் = வந்த பின்
ஒல்காமை = தளராமை , நடுங்காமை, சுருங்காமை
இவ்விரண்டின் = இந்த இரண்டின்
ஆறென்பர் = வழி என்பார்
ஆய்ந்தவர் கோள் = படித்து அறிந்தவர்களின் கோட்பாடு
முதலாவது, ஒரு வேலையை தொடங்குமுன் அதில் என்ன எல்லாம் சிக்கல் வரும், தடைகள் வரும்னு சிந்திக்கணும். நமக்கு ஆசையாக இருக்கிறது என்று யோசிக்காமல் கொள்ளாமல் காரியத்தில் இறங்கக் கூடாது. அது வீடு வாங்குவதாக இருக்கட்டும், திருமணம், வேலை, தொழில் தொடங்குவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆசை ஒரு புறம், ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும். அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டு , அந்த காரியத்தில் என்ன எல்லாம் தடை வரும், என்ன எல்லாம் சிக்கல் வரும், யார் தடை சொல்வார்கள், யார் இதை தடுக்க அல்லது கெடுக்க நினைப்பார்கள் என்று பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது, அந்த தடைகளை எப்படி வென்றெடுப்பது என்று வழி காண வேண்டும். எந்த காரியத்திலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். அந்த வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, சரி நாம் எவ்வளவுதான் சிந்தித்து, காரியத்தில் இறங்கினாலும் நாம் எதிர்பாராத சிக்கல்கள், சவால்கள், தடைகள் வராமல் இருக்குமா ? வரும் என்கிறார் வள்ளுவர். நாம் எவ்வளவுதான் முன் கூட்டியே திட்டமிட்டாலும், எதிர்பாராத சிக்கல்கள் வரத்தான் செய்யும். நம்மை அதற்கு தயார் படுத்துகிறார். காதலிக்கும் போது உள்ள சுகம் திருமண வாழ்வில் இல்லாமல் போகலாம். இல்லாமல் போகும் என்று நினைக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
நான்காவது, சரி அப்படி வந்து விட்டால் என்ன செய்வது ? "ஒல்காமை " வேண்டும் என்கிறார். மனம் தளரக் கூடாது. பிரச்சனைகள் வரும். சிக்கல்கள் வரும். மனம் தளராமல் இருக்க வேண்டும். போராட வேண்டும்.
ஐந்தாவது, இதுதானா வழி. வேற வழி இல்லையா என்றால் , ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் கண்ட வழி இது. உங்களுக்கு வேறு வழி தெரிந்தால் அதிலும் போகலாம். எதுக்கு சிரமப் படவேண்டும். நமக்காக சிரமப்பட்டு கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த வழியிலேயே போவது எளிதுதானே.
வாழ்க்கை என்பதே சிக்கல்களை, துன்பங்களை , சவால்களை , பிரச்சனைகளை எதிர்பார்த்து இருப்பதும், அவற்றை நீக்க போராடுவதும்தான். வேறு அல்ல.
ஒண்ணே முக்கால் அடியில் வாழ்க்கைத் தத்துவத்தை தருகிறார் வள்ளுவர்.
படிப்போம். நடக்க முயற்சிப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_26.html
விளக்கம் மிக மிக அருமை. நன்றி.
ReplyDeleteபிரமாதமான வாழ்வியல் விளக்கம். அற்புதம்
ReplyDeleteஅருமையான விளக்கம்! நன்றி... நன்றி!
ReplyDelete