காமம் சுடும்.
காமம் தீ. அது ஊனை உருக்கும். உயிரை உருக்கும்.
காமம் மனிதர்களை தடம் புரட்டி போட்டிருக்கிறது. இராஜியங்களின் எல்லை கோடுகளை
மாற்றி எழுதி இருக்கிறது.
தீ நெருங்கினால் தான் சுடும். காமம் விலகி நின்றாலும் சுடும் என்பார்
வள்ளுவர்.
தொடிர் சுடின் அல்லது காம நோய் போல
விடிர் சுடல் ஆற்றுமோ தீ ?
காமத்தை போல விட்டு விலகியபின்னும் தீயால் சுடமுடியுமா என்று கேட்கிறார்
வள்ளுவர்.
கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர
முடியாத கடல்.
---------------------------------------------------------------------------------------------------
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே
----------------------------------------------------------------------------------------------------
சீர் பிரித்த பின்
------------------------------------------------------------------------------------------------------
கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்தில் புணை என யான் கடந்தேன் சித்திர மாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே
----------------------------------------------------------------------------------------------------
கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற
குறத்தி = குற வள்ளி
பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன்.
அருளால் = அவனுடைய அருளால்
கலங்காத = கலக்கம் இல்லாமல்
சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு
புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு
தெரியவில்லை.
புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு
யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ?
சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின்
அல்குல் படத்தில் =
கழுத்தில் = கழுத்தில்
பழுத்த செவ் வாயில் = பழம் போன்ற சிவந்த இதழ்களில்
பனையிலும் = பனை மரம் போன்ற அழகிய தோள்களில்
உந்தி தடத்தில் = வயிற்றில்
தனத்தில் = அழகிய மார்பில்
கிடக்கும் வெங் காம சமுத்திரமே = கிடக்கும்
வெம்மையான காம சமுத்திரமே
No comments:
Post a Comment