Pages

Sunday, April 29, 2012

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....



கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே

பதம் பிரிப்போம்..

கிழியும் படி அடர் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர் எரி வாய் நரக
குழியும் துயரும் விடாப் படக் கூற்றுவன் ஊருக்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே


கிழியும் படி = சுக்கல் சுக்கலாக கிழியும் படி

அடர் குன்று = அடர்த்தியான குன்று. சூர பத்மனின் நண்பன் பெரிய மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான். அந்த மலை கிழியும் படி. மலை என்பது ஒரு உவமை. ஆணவம், கன்மம், மாயையை, காமம், குரோதம், மதம், ஆசை போன்ற மலைகள் நம்மை வழி மாற்றிப் போடுவதை அப்படி குறிப்பிடுகிறார் அருணகிரி.


எறிந்தோன் = உடைத்து எறிந்தோன்

கவி கேட்டு உருகி = சும்மா கேட்டா மட்டும் போதாது, கேட்டு, உணர்ந்து உருக வேண்டும்

இழியும் கவி கற்றிடாது = நல்ல கவி கேட்டால் மட்டும் போதாது, மோசமான கவிதைகளை கற்காமல் இருக்க வேண்டும்.

இருப்பீர் = இருங்கள்

எரி வாய் நரக = தீப் பிழம்போடு கூடிய நரகக்

குழியும் = குழியும்

துயரும் = தீக்குழியில் கிடந்து உழலும் துயரும்

விடாப் படக் = தண்ணி தாகத்துடன்

கூற்றுவன் ஊருக்குச் = யம பட்டணத்திற்கு

செல்லும் வழியும் துயரும் = செல்லுகின்ற வழியும், அந்த வழியில் உள்ள துயரமும்

பகரீர் பகரீர் மறந்தவர்க்கே = மறந்து போனவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள். ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்

மறுபடியும் சொல்லுகிறேன், நல்ல கவி படியுங்கள்....:)




2 comments:

  1. எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது:

    1. நல்ல கவி படிப்பதற்க்கும், நரகத்தைப் பற்றி சொல்வதற்க்கும் என்ன சம்பந்தம்?

    2. முருகனைப் பற்றிய நல்ல கவி மட்டும்தான் படிக்கச் சொல்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. இதில் என்னையா குழப்பம் ?

      மருத்துவரிடம் உடம்பு சரியில்லை என்று போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். மூணு வேளை, மூணு நாள் சாப்பிடுங்க என்கிறார் ?
      என்ன அர்த்தம்?
      சாபிட்டால் குணமாகும், சாப்பிடாவிட்டால் குணமாகாது.
      சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு கேக்கப் படாது...அது அப்படித்தான்

      Delete