Pages

Monday, April 23, 2012

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....



தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி



தொந்தி சரிய மயிரே வெளிற நிரை
தந்தம் அசைய முதுகே வளைய இதழ் 
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் - நகையாடி 


வயிறு தொப்பை வைத்து, வெளியே தள்ளிக் கொண்டு வர, முடி நரைத்து வெள்ளை நிறமாக மாற, வெண்மையான தந்தம் போன்ற பற்கள் லொட லொட என்று ஆட (தந்தம் அசைய), முதுகு வளைய, உதடுகள் தொங்கிப் போக, இரு கை வீசி நடந்த நான், இப்போது ஒரு கை கைத்தடியின் பிடித்துகொண்டு நடக்க, இளம் பெண்கள் எல்லாம் சிரித்து....

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி



தொண்டு கிழவன் இவன் யார் என இருமல்
கிண் கிண் என உரையே குழற விழி 
துஞ்சு குருடு படவே செவிடு படு - செவியாகி




தொண்டு கிழவன் இவன் யார் என (வினவ), இருமல் கிண் கிணி போல் எப்போதும் சத்தம் தந்து கொண்டே இருக்க, பேச்சு குழறி, ஒளி பொருந்திய விழிகள் தூங்கு மூஞ்சி விழிகள் மாதிரி மாற, என் காதுகள் செவிடாகி.....

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி



வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு
பண்டிதனும் மெய் உறு வேதனையும் இள
மைந்தர் உடமை கடன் ஏது என முடுகு - துயர் மேவி


இல்லாத நோய் எல்லாம் வந்து சேர, அதை போக்க ஒவ்வொரு மருத்துவராகப் போய் பார்த்து (பண்டிதன்), பிள்ளைகள் "இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ" என்று துயருற 



மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்


என் மனைவி என் மேல் விழுந்து அழ, யம பட்டர்கள் வரும் வேளையில், உடல் எல்லாம் மலம் ஒழுக, என் உயிர் மங்கும் போது, மயில் மேல் வரவேண்டும்.

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம



எந்தை வருக ரகு நாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக - அபிராம



என் தந்தையே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக, மகனே இனி வருக, என் கண் வருக, எனது ஆருயிரே வருக,, எனது ஆருயிரே வருக, அபிராம இங்கு வருக

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்



இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல - வரும் மாயன்




இங்கே வருக, அரசே வருக, முலைப் பால் உண்ண வருக (தாய் அழைக்கிறாள்), மலர் சூடிட வருக, என்று பரிவோடு, கோசலை சொல்ல , வரும் இராமன்



சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா



சிந்தை மகிழும் மருகா குறவர் இள
வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை 
சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா




சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா


திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.



திங்கள் அரவு நதி சூடிய பரமர்
தந்த குமர அலையே கரை பொருத
செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே 




திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே



1 comment:

  1. இவ்வளவு சந்தத்துடன், முதுமையைப் படம் பிடித்தது போல் காட்டி இருக்கிறார். இதை எனக்குப் படிக்க வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

    எனக்கு வரப்போகும் முதுமையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete