நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்
கலம்பகம் என்பது பலவகை செய்யுள்களால் ஆன ஒரு பிரபந்தவகை.
பாடல் பெறும் தகுதியுள்ள ஒரு தலைவனைப் பற்றிப் பாடுவது மரபு.
50 இல் இருந்து 100 வரை செய்யுள்கள் அமைத்து பாடுவது வழக்கம்.
கலம்பகத்தில் எனக்குப் பிடித்தது நந்தி கலம்பகம்.
நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான்.
தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு.
பாட்டுடை தலைவன் மேல் அறம் வைத்து பாடினால், அதை கேட்ட உடன் அவன் இறந்து விடுவான் என்று ஒரு நம்பிக்கை.
நந்தி வர்மனின் எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள்.
புலவனும், பணத்திற்கு ஆசைப் பட்டு, நந்தி வர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான்.
பாடிய பின், மனம் மாறி, தனக்கு பணம் கொடுத்தவர்களிடம் பாடல் எழுதவில்லை என்று சொல்லி விட்டான்.
அந்த புலவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒருநாள் அவளோடு தனித்து இருக்கும் போது நந்தி கலம்பகம் என்ற தான் எழுதிய நூலில் இருந்து சில பாடல்களை பாடினான்
கேட்ட மாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு சில பாடல்கள் மனப் பாடம் ஆகிவிட்டது.
ஒருநாள் அவள் தெரு வழியே போகும் போது அந்த பாடல்களை பாடிக் கொண்டே போனாள்.
அதை உப்பரிகையில் இருந்து கேட்ட நந்தி வர்மன் அந்த பாடல்களில் மயங்கி, அவளை அழைத்து அந்த பாடல்களின் வரலாறு கேட்டு அறிந்தான்.
அந்தப் புலவனை வரவழைத்தான்.
புலவனும் கண்ணீரோடு உண்மையை ஒப்புகொண்டான்.
நந்தி வர்மன், முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.
புலவன் மறுத்து, "மன்னா, இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.
நந்தி கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவனைப் பாடச் சொன்னான்.
நூறு பாடல்கள். புலவன் சொன்னான் "மன்னா, நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒரு பந்தலில் இருந்து கேட்க்க வேண்டும்....அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றான்.
மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் சாம்பலாய் போனான் என்று ஒரு கதை நிலவுகிறது.
நந்தியின் எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.
தமிழிலில் இந்த கதையை பின்னணியாக வைத்து ஒரு சில வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. (கோ. வி. மணிசேகரன் என்று ஞாபகம்)
தமிழ் சுவைக்காக உயிர் கொடுத்த அந்த நந்தி கலம்பகத்தில் இருந்து ஒரு பாடல்....
வானுறை மதியில் புக்க துன் தட்பம்
மறிகடல் புக்கதுன் பெருமை
கானுறை புலியிற் புக்கதுன் சீற்றம்
கற்பகம் புக்கதுன் கொடைகள்
தேனுறை மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் புக்கதுன் மேனி
யானுமென் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே எத்தைபி ரானே.
நந்தி இருக்கும் போதே அவன் இறந்து விட்டது போல் நினைத்து ஒரு புலவன் பாடுவதை போல் அமைந்த பாடல்.
வானுறை = வானத்தில் உறைகின்ற
மதியில் = நிலவில்
புக்க துன் = புகுந்தது உன்
தட்பம் = குளிர்ச்சி (தட்பம் = குளிர்ச்சி)
மறிகடல் = கடலிடம்
புக்கதுன் = புகுந்தது உன்
பெருமை = உன் அகன்ற பெருமை
கானுறை = காட்டில் உறையும் (வாழும்)
புலியிற் புக்கதுன் = புலியிடம் சென்று புகுந்தது உன்
சீற்றம் = கோபம்
கற்பகம் புக்கதுன் = கற்பக மரத்திடம் சென்று புகுந்தது உன்
கொடைகள் = கொடைக் குணம்
தேனுறை மலராள் = தேன் சிந்தும் தாமரை மலரில் உறையும் திருமகள்
அரியிடம் புகுந்தாள் = திருமாலிடம் சென்றாள் (உன்னை விட்டு மாலிடம் சென்றாள் என்று பொருள்)
செந்தழல் = சிவந்த தீயிடம்
புக்கதுன் மேனி = புகுந்தது உன் மேனி
யானுமென் கலியும் = நானும், என்னைப் பிடித்த சனியனும்
எவ்விடம் புகுவோம் = எங்கே போவோம்
நந்தியே = நந்தியே
எத்தைபி ரானே. = எங்கள் தலைவனே (பிரான் என்பது பிரியான் என்பதன் மரூவு)
அதாவது, நீ இறந்து விட்டாய். உன்னிடம் உள்ள சிறப்பு குணங்கள் எல்லாம் வேறு வேறு இடம் சென்று விட்டன.
நான் எங்கு போவேன் என்று நைந்து உருகி பாடிய பாடல்.
ஆகா, என்ன அருமையான கதை, என்ன அழகான பாடல். நிஜமாகவே நெஞ்சத்தை உருக்குகிறது.
ReplyDeleteஇதைப் படிக்கும் பேறு கொடுத்ததற்கு நன்றி.
Thanks for introducing us the story and the poem.
ReplyDeleterevathi.
SUPER SIR.
ReplyDelete