கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்
பதினாலு வருடங்கள் இராமனோடு காடு மேடு எல்லாம் அலைந்து, உறங்காமல் கண் விழித்து நைந்து போய் நந்தி கிராமம் வருகிறான் இலக்குவன்
அங்கே, பதினாலு வருடம் இராமன் பாதுகைகளை வைத்து, தவ வேடம் பூண்டு, உடலும் உள்ளமும் உருகி நைந்து போய் இருக்கிறான் பரதன்.
எதிர் வந்த இலக்குவனை பரதன் வரவேற்கிறான்.
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டனர்.
சுற்றி இருந்த மக்கள் எல்லாம், இதில் அதிகம் நைந்தது யார் என்று வருத்ததோடு பார்த்தனர்.
அந்த மனதை உருக்கும் பாடல்....
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட, தாள்
தொடு தடக் கை ஆரத் தழுவினன் - 'தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?' என்று உலகம் நைய
ஊடுறு = மனம் வரை ஊடுருவி பார்க்கும்
கமலக் கண்ணீர் = தாமரை போன்ற கண்களில் இருந்து கண்ணீர்
திசைதொறும் = அனைத்து திசைகளிலும்
சிவிறி ஓட = சிதறி ஓட
தாள் = கால் வரை
தொடு தடக் கை = தொடும் பெரிய கை கொண்டு
ஆரத் தழுவினன் = அன்போடு தழுவினான்
தனிமை நீங்கி = தனிமை நீங்கி
காடு உறைந்து = காட்டில் வாழ்ந்து
உலைந்த மெய்யோ = உருக் குலைந்த (இலக்குவனின்) உடலோ
கையறு = செயலற்று
கவலை கூர = கவலை வாட்ட
நாடு உறைந்து = நாட்டில் இருந்து
உலைந்த மெய்யோ = உருக் குலைந்த (பரதனின்) உடலோ
நைந்தது? = எது அதிகம் நைந்தது
என்று உலகம் நைய = என்று உலகம் நைந்து உருக
எவ்வளவு பேருக்கு எவ்வளவு கஷ்டம்? இராமயணத்தில் யார் தான் சுகப் பட்டார்கள்?
கொஞம் ஓவர்தான், இருந்தாலும் நன்றாக இருக்கிறது!
ReplyDelete