முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு
அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.
இரவும் பகலும் அவன் நினைவாகவே இருக்கிறாள்.
அவள் கனவில் அவன் வருகிறான்.
இருவரும் கனவில் சந்தோஷமாக பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கின்றனர்.
மறு நாள் காலை. அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க வருகின்றனர்.
"என்னடி, ரொம்ப சந்தோஷமா இருக்காப்ல இருக்கு? என்ன விஷயம்? வாயெல்லாம் பல்லா இருக்கு....நேத்து உன் ஆளு கனவுல வந்தானா ? ஏதாவது சில்மிஷம் பண்ணினானா? என்ன விஷயம் சொல்லு. " என்று அவளை கிண்டல் பண்ணினர்.
"என் கனவுல அவன் வந்ததது இவளுகளுக்கு எப்படி தெரியும்" என்று அவள் யோசிக்கிறாள்...
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றுஅலரும் நல்நாடன், என்ஆகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவர்அறிந்த வாறு
புன்னாகச் = புன்னை மரங்கள் நிறைந்த
சோலை = சோலை
புனல் = நீர் நிறைந்த
தெங்கு = தென்னை மரம்
சூழ்மாந்தை = சூழ்ந்த மாந்தை என்ற ஊர்
நன்னாகம் = நறுமண மலர்கள்
நின்றுஅலரும் = நிறைய பூத்து குலுங்கும்
நல்நாடன் = நல்ல ஊரைச் சேர்ந்தவன்
என்ஆகம் = என் உடல் (இங்கு மனம் என்று கொள்வது சரியாக இருக்கும்)
கங்குல் = இரவில்
ஒருநாள் = ஒரு நாள்
கனவினுள் = கனவினுள்
தைவந்தான் = மெல்ல வந்தான்
என்கொல் = அது எப்படி
இவர்அறிந்த வாறு = இவர்களுக்குத் தெரியும்?
(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)
ஆகம் அன்றால் "உள்ளே" என்றும் கொள்ளலாம் அல்லவா? எனவே, மனம் என்பது பொருந்தும்.
ReplyDeleteஇந்தப் பாட்டுக்குக் கொடுத்த முன் விளக்கம் பிரமாதம்.