கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது
பெண், ஆணை விட அதிகம் உணர்ச்சி வசப் படுகிறாளோ?
ஊடலும், கூடலும், கோபமும், புன்னகையும், காதலும், கண்ணீரும் மாறி மாறி சோப்புக் குமிழியின் நிறம் போல மாயா ஜாலம் காட்டும் கலிங்கத்துப் பரணி பாடல் இங்கே.
அவள் அவனோடு ஊடல் கொண்டு இருக்கிறாள்.
அவன் அவளை சமாதனப் படுத்துகிறான்.
அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வருகிறாள்.
அவனைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாய் இருக்கிறது. சரி போனால் போகிறது என்று ஊடலை விட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள்.
அது போதாதா நம்ம ஆளுக்கு.
அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் தர முனைகிறான்.
அவன் தன் மேல் கொண்ட காதலை அவள் அறிகிறாள்.
அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் சுரக்கிறது."ஏய், என்ன இது, அசடு மாதிரி அழுதுகிட்டு" என்று அவள் கண்ணீரை தன் விரலால் துடைக்கிறான்....
முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும்
கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.
கொஞ்சம் சீர் பிரிப்போம்....
முனிபவர் ஒத்து இலராய் முறுவல் கிளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித் துவர்வாய்
கனி பவளத்தருகே வருதலும் முத்துதிரும்
கயல்கள் இரண்டுடையீர் கடைதிற மின் திறமின்.
பொருள்:
முனிபவர் = கோபப் பட்டவர்களை
ஒத்து = போல் ஒத்து இருந்து
இலராய் = பின் (அந்த கோபம்) இலராய்
முறுவல் = (ஊடல் போன பின்) புன்னகை
கிளைத்தலுமே = கிளை விட்டு பரவினார் போல
முகிழ்நகை = மலரும் சிரிப்பு
பெற்றமெனா = பெற்று விட்டோம் என
மகிழ்நர் = கணவர் (அல்லது காதலர்)
மணித் = ஆழகான
துவர்வாய் = பவளம் போன்ற வாய்
கனி = கனிந்த
பவளத்தருகே = பவளம் போன்ற செந்நிற இதழ்களுக்கு அருகே
வருதலும் = வரும் போது
முத்துதிரும் = முத்து (போல கண்ணீர்) உதிரும்
கயல்கள் = மீன்களைப் போல
இரண்டுடையீர் = இரண்டு கண்களை உடையீர்
கடை = கதவை
திற மின் திறமின். = திறங்களேன், திறங்களேன்
தூள் பாட்டு.
ReplyDeleteஇந்த முன் விளக்கம் இல்லாவிட்டால், ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தெரிந்தால்கூட இது இவ்வளவு இனித்திருக்காது. சும்மா சினிமா சீன் மாதிரி! பிரமாதம்.