Pages

Monday, June 11, 2012

கம்ப இராமாயணம் - கோப்பையில் விழுந்த நிலா


கம்ப இராமாயணம் - கோப்பையில் விழுந்த நிலா


அவள் ஒரு இளம் பெண்.

ஒரு நாள், அவள் மதுவை ஒரு கோப்பையில் ஏந்தி வருகிறாள்.

பெண்கள் அந்த காலத்தில் தண்ணி அடித்திருக்கிறாள் !

அப்படி வரும் போது, அவளின் முகம் அந்த கோப்பையில் தெரிகிறது.

அதை நிலவு என்று நினைக்கிறாள். ஒரு புறம் நிலவு போன்ற அவளின் அழகு, மறு புறம் மது தந்த போதை.

அவள் அந்த நிலவிடம் சொல்கிறாள்...

"ஏய் நிலா, நான் என் காதலனோடு ஊடல் கொண்டு இருக்கும் போது நீ சுடாமல் குளிர்ச்சியாக இருந்தால் உனக்கு இந்த மதுவை தருவேன்" என்று போதையில் கூறுகிறாள்.


கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி.
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி.
‘உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள். வெம்மை நீங்கி.
தண் மதி ஆகின். யானும் தருவென். இந் நறவை’ என்றாள்.


கள் = மது நிறைந்த

மணி வள்ளத்துள்ளே = அழகிய இந்த கோப்பையில்

களிக்கும் = சந்தோஷத்தில் இருக்கும்

தன் முகத்தை நோக்கி. = தன் முகத்தை நோக்கி

விண் மதி = விண்ணில் உள்ள நிலவு

மதுவின் ஆசை = மது பருகும் ஆசையால்

வீழ்ந்தது என்று = இந்த கோப்பைக்குள் வீழ்ந்தது என்று

ஒருத்தி உன்னி. = ஒரு பெண் நினைத்து

உள் மகிழ் = உள்ளம் மகிழ்கின்ற

துணைவனோடும் = காதலனோடு

ஊடு நாள்.= நான் ஊடல் கொண்டு இருக்கும் போது

வெம்மை நீங்கி. = வெப்பம் இல்லாமல்

தண் மதி ஆகின் = குளிர்ந்த நிலவாக நீ இருந்தால்

யானும் தருவென் = நான் தருவேன்

இந் நறவை என்றாள். = இந்த மதுவை உனக்கு என்றாள்



1 comment:

  1. Amazing to know the standard of Tamil language several centuries back!
    Today's Tamilians are virtually illiterate compared to the previous era, going by the rich language of Tamil! That includes me!

    ReplyDelete