Pages

Tuesday, June 19, 2012

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

குமர குருபரர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை, செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய சகலகலாவல்லி மாலை, சரஸ்வதியை பற்றி எழுதியது. 

மிக மிக எளிய தமிழில் எழுதப்பட்ட சுகமான பாடல்கள்.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

சீர் பிரித்த பின்:

மண் கண்ட வெண் குடை கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்
கண் கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே 

பொருள்


மண் கண்ட = இந்த மண் பார்த்த

வெண் குடை கீழாக = வெண் கொற்ற குடைகீழாக அரசு செய்யும்

மேற்பட்ட மன்னரும் = பெரிய மன்னர்களும்

என் = என்னுடைய

பண் கண்ட = பாடலை கேட்ட

அளவிற் = உடன்

பணியச் செய்வாய் = அவர்களை என்னிடம் பணியச் செய்வாய்

படைப்போன் முதலாம் = பிரமன் முதாலாக

விண் கண்ட தெய்வம் = விண்ணில் உள்ள தெய்வங்கள்

பல கோடி உண்டேனும் = பல கோடி உண்டு என்றாலும்

விளம்பில் = சொல்லப்போனால்

உன் போல் = உன்னைப் போல

கண் கண்ட = கண்கள் நேரில் கண்ட

தெய்வம் உளதோ = தெய்வம் இருக்கிறதா? (இல்லை)

சகலகலாவல்லியே = அனைத்து கலைகளிலும் வல்லமை உள்ளவளே


3 comments:

  1. இந்த பாடலில் ஒரு கர்வம் தெரிகிறது போல் உள்ளது. கலை வாணியை புகழ்வது போல் தன் பெருமையை சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. குமர குருபரர் இறை அருள் பெற்ற புலவர். அவர் கர்வப்பட்டு எழுதியதாக நான் நினைக்கவில்லை.
      கர்வம் உள்ள மனத்தில் இப்படி ஒரு அழகான கவிதை வருமா ?

      Delete
  2. இந்தப் பாடலைப் பாடி, கலைமகளின் அருளால், டெல்லி மன்னரை வாதில் வென்றார் குமரகுருபர சுவாமிகள். வடமொழிப் புலமை பெறுவதற்கு இப்பதிகம் காரணமாயிற்று.

    ReplyDelete