கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கேளுங்க, அவனை கேக்காதீங்க...
அசோக வனத்தில் தனிமையில் சீதை இருக்கிறாள்.
இரவு நேரம்.
சற்று யோசித்துப் பாருங்கள்.
செல்லமாய் வளர்ந்த சகரவர்த்தியின் மகள். இராமனுக்கு வாழ்க்கைப் பட்டு, தசரதனுக்கு மருமகளாக வந்தாள்.
இராமன் முடி சூட்டப் போகிறான். பட்டத்து இராணியாக வேண்டியவள், "நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம்" என்று அவன் பின்னால் கானகம் சென்றாள்.
இராவணனால் கடத்தப்பட்டாள்.
அந்த அசோக வனத்தில், இரவு நேரத்தில், நிலவை பார்க்கிறாள்.
"ஏய், அறிவு இல்லாத நிலவே, நகராமல் நிற்கும் இரவே, குறையாத இருளே, எல்லோரும் என்னையே சொல்லுங்க.
என்னை விட்டு தனியா இருக்கானே, அந்த இராமன், அவன் கிட்ட ஒண்ணும் கேக்க மாட்டீங்களா ?" என்று இரவோடும், நிலவோடும் சண்டை பிடிக்கிறாள்.
‘கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !
செல்லா இரவே !சிறுகா இருளே !
எல்லாம் எனையேமுனிவீர்; நினையா
வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ?
கல்லா மதியே ! = கல்வி அறிவு இல்லாத மதியே
கதிர் வாள் நிலவே != கதிரவனின் ஒளியை பெற்று வாழும் நிலவே
செல்லா இரவே ! = செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே
சிறுகா இருளே ! = குறையாமல் இருக்கும் இருளே (சிறுகா = சிறியது ஆகாமல்)
எல்லாம் எனையேமுனிவீர்; = நீங்க எல்லாரும் என் கிட்டயே கோவப் படுவீங்க
நினையா = என்னை பற்றி நினைக்காத
வில்லாளனை, = இராமனை
யாதும் விளித்திலிரோ ? = ஒண்ணும் கேக்க மாட்டீங்களா?
Mikavum arumai
ReplyDelete