Pages

Tuesday, July 3, 2012

திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


நாம் யாரோடு உறவு / நட்பு வைத்துக் கொள்ள ஆசைப் படுவோம்?

நம்மை விட அழகில், படிப்பில், செல்வத்தில், பதவியில் உயர்ந்தவர்கள் அல்லது சமமானவர்களுடன் உறவோ நட்போ கொள்ள ஆசை படுவோம்.

நம்மை விட கீழே உள்ளவர்களிடம் நாம் உறவோ நட்போ பாராட்டுவோமா ?

இறைவன் நம்மை விட அனைத்து விதத்திலும் உயர்ந்தவன்.

அவன் நம்மிடம் அன்போ, அருளோ பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

நம்மால் அவனுக்கு ஆகவேண்டியது என்ன ? ஒன்றும் இல்லை.

"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை,
யார் கொலோ சதுரர்"

என்பார் மணி வாசகர்.

அப்படிப் பட்ட இறைவன், நமக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து நமக்கு உதவி செய்யும் அருளை நினைத்தால், நம் மனம் உருகும் என்கிறார் மணி வாசகர்.

யோசித்துப் பாருங்கள்.

அறுவை சிகிச்சை மூலம் நம் ஒரு காலை அகற்ற வேண்டும் என்றால் ஒரு இலட்சம் செலவு ஆகும்.

எடுப்பதற்கே ஒரு இலட்சம் என்றால் அந்த காலை நமக்கு இலவசமாய் தந்தவனுக்கு எத்தனை இலட்சம் தரலாம் ?

இறைவனின் அருளை நினைக்க நினைக்க நம் சிந்தனை உருகும்.

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்.

சிந்தனையையை உருக்கும் அந்த திருவாசகப் பாடல் இங்கே...





இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.


இந்திரனும் = இந்திரனும்

மாலயனும் = மால் (திருமால்) + அயன் (பிரம்மா)

ஏனோரும் வானோரும் = மற்றைய விண்ணவர்களும்

அந்தரமே நிற்கச் = அங்கேயே நிற்க. வானிலேயே நிற்க.

சிவன் = சிவ பெருமான்

அவனி = இந்த உலகத்திற்கு

வந்தருளி = வந்து அருளி

எந்தரமும் = எந்த தரம் என்றாலும் (உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று தரா தரம்
பார்க்காமல்)

ஆட்கொண்டு = அவர்களை ஆண்டு கொண்டு

தோட்கொண்ட = தோள் கொண்ட

நீற்றனாய்ச் = திரு நீறு அணிந்தவனே

சிந்தனையை வந்துருக்கும் = உன் அருளை நினைத்தால், மனம் உருகும்
சீரார் பெருந்துறையான் = நலன்கள் பல நிறைந்த திருப் பெருந்துறை என்னும்

தளத்தில் உள்ள சிவனே

பந்தம் பரியப் = எம்முடைய பாச பந்தங்கள் அற்றுப் போக

பரிமேற்கொண் டான் = குதிரை மேல் வந்த அவன்

தந்த = தந்த

அந்தமிலா ஆனந்தம் = முடிவே இல்லாத ஆனந்தத்தை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை பாடுவோம்

1 comment: