நாலடியார் - மாலை எனை வாட்டுது
இந்த மாலை நேரம் தான் காதலர்களை என்ன பாடு படுத்துகிறது.
இன்று நேற்று அல்ல, நாலடியார் காலத்தில் இருந்தே இந்த பாடு தான்.
அது ஒரு சின்ன கிராமம். சில பல வீடுகள்.
இங்கே ஒரு இளம் பெண், அவளுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பூக்களை கொண்டு மாலை தொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.
நேரமோ மாலை.
சாலையில், வேலை முடிந்து மக்கள் எல்லாம் வீடு திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.
அவளுக்கு, அவளின் காதலன் நினைவு வருகிறது.
அவனுடன் இருந்த இனிய நாட்கள் மனதில் ஓடுகிறது.
பிரிவு சோகம் அவளை சோர்வுறச் செய்கிறது.
கையில் கட்டிகொண்டிருந்த மாலை நழுவி கீழே விழுகிறது.
"ஹ்ம்ம்...இந்த மாலையெல்லாம் கட்டி என்ன பிரயோஜனம்..அவன் இல்லையே என்று ஏங்குகிறாள்.."
பாடலைப் படித்துப் பாருங்கள்...மாலையில் அந்த மாலையில் வந்த காதல் புரியும்....
கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
கம்மஞ்செய் = கம்மம் என்றால் தச்சு வேலை, கொல்லன் வேலை, போன்ற வேலை. ஆங்கிலத்தில் smith என்பார்கள்.
மாக்கள் கருவி ஒடுக்கிய = மனிதர்களும், விலங்குகளும் அவர்கள் உபயோகப்
படுத்திய கருவிகளும் ஒடுங்க, (தளர)
மம்மர்கொள் = மயக்கம் தரும்
மாலை = மாலையில், மாலைக்காக
மலராய்ந்து = மலர்களை ஆய்ந்து
பூத்தொடுப்பாள் = பூ தொடுப்பாள்
கைம்மாலை = கையில் உள்ள மாலை
இட்டுக் கலுழ்ந்தாள்,= நழுவ விட்டு கவலைப் பட்டாள்
துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு
இம்மாலை என்செய்வ தென்று. = இந்த மாலையை வைத்து என்ன செய்வது என்று
(In the evening, all the people are returning to their home to see their husband/wife/lover. I am all alone...what am I supposed to do with this garland....)
No comments:
Post a Comment