Pages

Monday, July 23, 2012

பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


சில சமயம், நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்கும் போது, நம்மால் முடியாவிட்டால் கூட "அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு" என்று நம்மால் முடியாத விஷயங்களில் கூட நாம் செய்து தருவதாய் உறுதி கூறி விடுவோம்.

அது போல், இல்லாத பொருளை கூட இருப்பதை போல சொல்லி தர்ம சங்கடத்தில் மாட்டி கொள்வது உண்டு.

"எனக்க அவனை தெரியும், இவனை தெரியும்...ஒரு போன் போட்டா போதும், காரியம் உடனே நடந்து விடும்..." என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சொல்லுவது உண்டு.

நாம் நினைப்போம் அப்படி சொல்வது நம் மதிப்பையும், செல்வாக்கையும் உயர்த்தும் என்று நினைப்போம்.

மாறாக, சொன்ன விஷயங்களை செய்ய முடியாமல் போகும் போது, அது நம் மதிப்பை குறைத்து விடும்.

ஆட்டு இடையன், ஆடு மாட்டிற்கு வேண்டும் என்று மரத்தில் இருந்து கொஞ்சம் இல்லை தழைகளை பறிப்பான். ஏதோ கொஞ்சம் தானே என்று இருக்கும். ஆனால் நாளடைவில், அது முழு மரத்தையும் மொட்டையாக்கி விடும்.

அதுபோல், அளவுக்கு அதிகமாய் உறுதி மொழி தருவது, நாளடைவில் நம் புகழ் மற்றும் செல்வாக்கு அனைத்தையும் அழித்து விடும்.

"இடையன் எறிந்த மரம்"





அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,
இடையன் எறிந்த மரம்.


அடையப் பயின்றவர் = நம்மை அடைந்து, நீண்ட நாள் நம்மோடு இருந்தவர்கள் (=நண்பர்கள், உறவினர்கள்)

சொல் ஆற்றுவராக் கேட்டால், = அவர்களுக்கு ஒன்று வேண்டும் என்று நம்மிடம் கேட்டால்

உடையது ஒன்று இல்லாமை = நம்மிடம் அது இல்லாவிட்டாலும்

ஒட்டின் = உறுதியாக இருக்கிறது என்று சொல்லுவது

படை வென்று = படைகளை வெல்லும் (கூரிய வேல் போன்ற ஆயுதம் போன்ற)

அடைய அமர்த்த கண் = கண் அமையப் பெற்றவளே

ஆயிழாய்!- = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே

அஃதால், = அது எப்படி இருக்கிறது என்றால்

இடையன் எறிந்த மரம். = இடையன் எறிந்த மரம் போல...கொஞ்ச கொஞ்சமாய் மரம் அழிவது போல, அளவுக்கு அதிகமாய் உறுதி அளிப்பது புகழை கொஞ்ச கொஞ்சமாய் அழிக்கும்

வாய் சவடால் பேசுபவர்கள் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்....


1 comment:

  1. அருமையான பா. கடினமான பாவாகவும் உள்ளது. உரையை வைத்து பா-வை அந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. www.tamilvu.org ல் பழமொழிக்கு உள்ள இராசமாணிக்கம் பிள்ளை அவர்களின் உரையும் இதே பொருளில் தான் அமைந்துள்ளது. இதன் பொருளை சற்று மாற்றினால், பா சற்று எளிதாவது போல் தெரிகிறது. "ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை சொல்லாடார், சோரவிடல்" என்னும் குறளின் அடிப்படையில் பொருள் கொள்ளலாம். அதாவது,

    அடையப்பயின்றவர் - நம்மை அடைந்து நீண்டகாலம் பழகியவர்
    சொல் "ஆற்றுவரா"க் கேட்டால் - நாம் சொல்லும் சொல்லை "பொறுத்துக்" கொண்டு ஏற்றுக்கொண்டால்,
    உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் - நம்மிடம் உள்ள ஒரு பொருளை இல்லை என்று அறுதியிட்டால்
    (அது) இடையன் எறிந்த மரம் -- அது இடையன் எறிந்த மரம் போன்று கொஞ்சம் கொஞ்சமாக அந்த நண்பரது நட்பை இழக்கச் செய்துவிடும்.

    ஏனெனில் அந்த நண்பரைப் பொருத்தமட்டில், அவருக்கு நமது நட்பு, ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை போன்றது, அதனால் அவர் நமது நட்பை சோரவிட்டுவிடுவார். இந்த பொருளில் பா அமைப்பு புரிந்துகொள்ள எளிதாக உள்ளது.

    ReplyDelete