Pages

Monday, July 9, 2012

ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


அதி காலையில் பல் விளக்கி, முகம் கழுவி தெய்வத்தை அவரவர் சமய முறைப்படி தொழ வேண்டும்.

மாலையில் இறைவனை தொழும் போது, நின்று கொண்டே தொழக் கூடாது. தரையில் அமர்ந்து தொழ வேண்டும்.

பாடல்






நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

சீர் பிரித்தபின்

நாள் அந்தி கோல் தின்று கண் கழி தெய்வத்தை
தான் அறியும் ஆற்றால் தொழுது எழுக அல்கு அந்தி
நின்று தொழுதல் பிழை 

பொருள்;

நாள் அந்தி = அதி காலை

கோல் தின்று = அந்தக் காலத்தில் வேப்பங் குச்சியில் பல் விளக்குவார்கள். பல் விளக்கியபின், அந்த குச்சியின் நீளம் குறைந்து இருக்கும். ஏதோ பல் விளக்கியவர்கள் அதை தின்று விட்ட மாதிரி இருக்கும். சுருக்கமாக, "பல் விளக்கி"

கண் கழி = கண்ணில் உள்ள அழுக்கை கழிய விட்டு. அதாவது முகம் கழுவி

தெய்வத்தை = தெய்வத்தை

தான் அறியும் = தான் அறிந்த முறைப்படி (அவரவர் சமய முறைப்படி)

ஆற்றால் = முறையால், பாதையால், வழியால்

தொழுது எழுக = தொழுது எழுக

அல்கு அந்தி = மாலையில்

நின்று தொழுதல் பிழை  = (இறைவனை) நின்ற படி தொழுதல் தவறு.

தரையில் அமர்ந்து தொழ வேண்டும். நின்ற படி தொழுதால், கால் வலிக்கும். சீக்கிரம் வழிபாடு முடிந்துவிடும். அமர்ந்து தொழுதால், நீண்ட நேரம் இறைவனை வணங்க முடியும்.

இரை தேடிய பின், இறை தேடுவதில் என்ன அவசரம் ?


1 comment:

  1. இரை தேடிய பின், இறை தேடுவதில் என்ன அவசரம் ?--- SUPERB PUNCH LINE. நம் முன்னோர்கள் பூஜை செய்யும் முறை நம் உடல் ஆரோக்யத்தை செம்மை படுத்துவது போல் அமைத்துள்ளார்கள் . உட்கார்ந்து மனம் ஒன்றி பூஜை செய்யும் பொழுது நம் உடலில் உள்ள மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபுரம்... ... போன்ற ஆறு சக்ரங்களும் நன்றாக வேலை செய்யும். அதுவும் வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது பட்டினி அவசியம் இல்லை. மற்ற எந்த ஆசாரமும் தேவை இல்லை என்ற நிலைமை வந்துள்ளது. ஆசாரம் பரமோ தர்மஹா என்று ஆசாரம் நம் முதல் கடமை என்று கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete