Pages

Tuesday, July 10, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நம் வாழ்க்கை பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

நிற்கவோ, யோசிக்கவோ எதற்குமே நேரம் இல்லை.

இதில், கோவிலுக்குப் போக எங்கே நேரம் இருக்கப் போகிறது. அதிலும் ஸ்ரீரங்கம் போன்ற சிறந்த புண்ணிய தலங்களுக்குப் போக நேரம் இருக்கவே இருக்காது.

நேரம் இல்லை என்ற சாக்கு இன்று நேற்று அல்ல, தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது.

கோவிலுக்குப் போக நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனை மனதினால் நினைக்கலாமே ? அதற்க்குக் கூடவா நேரம் இருக்காது என்று கேட்கிறார்.

பாசுரம்





பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே

சீர் பிரித்த பின்:

பணிவினால் மனது ஒன்றி பவளவாய் அரங்கனார்க்கு
துணிவினால் வாழ மாட்டாது தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில்
மணியினார் கிடந்த ஆற்றை மனதினால் நினைக்கலாமே 

பொருள்:

பணிவினால் = பணிவோடு

மனது ஒன்றி = மனது ஒன்றி, ஒருமுகப்பட்டு

பவளவாய் = பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய

அரங்கனார்க்கு = திருவரங்கத்தில் உள்ள திருமாலுக்கு

துணிவினால் = துணிந்து

வாழ மாட்டாது = சரியாக வாழாமல்

தொல்லை நெஞ்சே = தொல்லை தரும் என் மனமே

நீ சொல்லாய் = நீயே சொல்

அணியினார் = அழகான அணிகலன்களை கொண்ட

செம்பொன்  ஆய = செம்மையான பொன்னால் ஆன

அருவரை = அழகான மலை (வரை = மலை)

அனைய கோயில் = போன்ற கோயில்

மணியினார் கிடந்த = நீல மணி போல கிடந்த

ஆற்றை  = முறையை, நிலையையை

மனதினால் நினைக்கலாமே = மனதினால் நினைக்கலாமே

'துணிவினால் வாழ மாட்டாது' என்பதற்கு பல பொருள் சொல்கிறார்கள் உரை எழுதிய பெரியவர்கள்.

நாம் பல காரியங்களை, தவறு என்று தெரிந்தும் துணிந்து செய்கிறோம். இது ஒரு உரை.

ஏதோ நாம் பல காலம் இருக்கப் போவது மாதிரி, துணிவுடன் இருக்கிறோம். மரணம் நமக்கு இல்லை என்ற துணிவோடு இருக்கிறோம். இது இன்னொரு உரை.

இறைவனை வணங்காமல், இறைவன் என்று ஒருவனே கிடையாது என்றெல்லாம் துணிவுடன் சொல்லித் திரிகிறோம். இது மாற்றுமொரு உரை.

மனதினால் நினைக்கலாமே? அது கூடவா முடியாது ?


No comments:

Post a Comment