கம்ப இராமாயணம் - மனக் குயிலா ? மாடக் குயிலா ?
முதன் முதலாக காதலனையோ காதலியையோ பார்த்து காதல் வயப்படவர்களுக்குத் தெரியும்..."அட இந்த பெண்ணை (ஆணை) தான் இத்தனை நாளாய் நான் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்...இவளுக்காகத்தான் (இவனுக்காத்தான்) இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்" என்ற உணர்வு...
சீதையை அருகில் நேரில் பார்க்கிறான் இராமன்.
அவனால் நம்ப முடியவில்லை.
உப்பரிகையில் பார்த்த சீதை ஏதோ கனவு மாதிரி இருந்தது அவனுக்கு.
நேரில் அவளைப் பார்த்தவுடன், "அட, இவள் என் மனதில் மட்டும் தான் இருந்தாள் என்று நினைத்தேன், மனதுக்கும் வெளியேவும், நிஜத்திலும் இருக்கிறாளா" என்று வியக்கிறான்...
நல் அமுது பில்குற்று.
அறத்தின் விளைவு ஒத்து. முகடு
உந்தி. அருகு உய்க்கும்.
நிறத் துவர் இதழ்க் குயில்
நினைப்பினிடை அல்லால்.
புறத்தும் உளதோ?” என
மனத்தொடு புகன்றான்.
நல் அமுது = நல்ல அமுதம்
பில்குற்று. = சிந்தி, சிதறி, வழிந்து
அறத்தின் விளைவு ஒத்து. = சிறந்த அறத்தின் பலனாய் விழைந்த
முகடு உந்தி = முகட்டில் இருந்து வந்து (இங்கு கன்னி மாடம் என்ற உயர்ந்த இடம்)
அருகு உய்க்கும் = அருகில் வந்து.
நிறத் துவர் = சிவந்த நிறத்தை
இதழ்க் குயில் = இதழில் கொண்ட குயில்
நினைப்பினிடை அல்லால். = என் நினைவில் (மனதில்) மட்டும் அல்ல
புறத்தும் உளதோ?” என = மனதிற்கு வெளியேயும் உள்ளதோ ? என்று
மனத்தொடு புகன்றான். = தன் மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்
Aha, what a nice poem! The last three lines are great.
ReplyDelete