Pages

Monday, October 1, 2012

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்


திடீரென்று கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு ?

அவர் கடவுள் தானா என்று கூடத் தெரியாது உங்களுக்கு.
அவரோ, அவளோ , அதுவோ உங்களை விட உயரமா ? குள்ளமா ? கறுப்பா? சிவப்பா ? குண்டா ? ஒல்லியா ?

ஒண்ணும் தெரியாது. 

முன்ன பின்ன பார்த்து இருந்தாதான ?

அபிராமி தெருவில் நடந்து வருகிறாள். சேலை கட்டி, காலில் செருப்பு அணிந்து, கையில் என்ன புத்தகமா? 

நம் கூட + 2 விலோ , கல்லூரியிலோ  படிக்கும் பெண் போல இருக்கிறாள்.

பக்கத்து வீட்டிலோ, எதிர் வீட்டிலோ, பேருந்து நிலையத்திலோ, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அவளை.

நம்ம அக்கா தங்கை மாதிரி, நம்ம அம்மா மாதிரி, அத்தை மாதிரி, சித்தி மாதிரி...ஏதோ நம்ம குடும்ப பெண் மாதிரி இருக்கிறாள் 

"காணுதற்கு அந்நியள் அல்லாத"  பெண் அவள். 

நம்ம வீட்டு பெண் மாதிரியே இருக்கிறாள். 

அவளை முதல் முதலில் பார்த்த உடனேயே அவள் மேல் ஒரு காதல். 

காதலா அது ? இல்லை பக்தியா ? இல்லை வேறு ஏதாவது ஒன்றா ? 

எல்லா உறவுக்கும் பெயர் இருக்கிறதா என்ன ? 

அன்பு என்று சொல்லலாமா ?

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.

எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

எனக்கு மட்டும் தானே வந்தது..ஏதோ முன் ஜன்ம புண்ணியம்....

அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய்த புண்ணியமே

...அவள் தான் ஆதி...அவள் தான் அந்தம்.. அவளால் தான் இந்த அந்தாதி...

அவள் தன இந்த உலகை எல்லாம் காக்கிறாள். இருந்தாலும் எனக்கு என்னவோ அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

மற்றவர்களால் அவளுக்கு ஒரு துன்பம் வரக் கூடாது....எல்லோரும் கடவுளிடம் " கடவுளே என்னைக் காப்பாற்று" என்று வேண்டுவார்கள்...எனக்கு என்னவோ நான் அவளைக் காப்பாற்ற வேண்டும் போல் இருக்கிறது....என்னே என் பேதை மனம்...அவள் ஆதி பராசக்தி...அவளை போய் நான் காப்பாற்றுவதா...


பேணுதற்கு எண்ணிய எம் பெருமாட்டியையை 

அபிராமி பட்டர் உருகுகிறார்...படித்துப் பாருங்கள்...உங்கள் மனமும் உருகலாம்....


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே


பொருள்:

வாணுதற் கண்ணியை = வாள் + நுதல் + கன்னியையை = வாள் போன்ற கூரிய நெற்றியையை உடைய பெண்ணை

விண்ணவர் யாவரும் வந்து = வானில் உள்ள தேவர்கள் யாவரும் வந்து

இறைஞ்சிப் = கெஞ்சி

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை = அவளை அரவணைத்து 
காப்பாற்ற எண்ணிய 

பேதை நெஞ்சில் = அவர்களுடைய பேதை நெஞ்சில்

காணுதற்கு = நேரில் காண்பதற்கு

அண்ணியள் அல்லாத கன்னியை = வேற்று ஆள் போல் அன்னியம் இல்லாத கன்னியையை

காணும் = கண்ட பின் 

அன்பு பூணுதற்கு = அவள் மேல் அன்பு கொள்ள

எண்ணிய எண்ணமன்றோ = எண்ணிய என் எண்ணம் இருக்கிறதே

முன் செய் புண்ணியமே = அது நான் முன்பு செய்த புண்ணியத்தால் எனக்கு கிடைத்தது

அபிராமி அந்தாதிக்கு பொருள் சொல்லி புரிய வைக்க முடியாது.

அது படிக்கும் பாடல் அல்ல.

உணரும் பாடல்.







3 comments:

  1. நிஜமாகவே இந்தப் பாடல் என்னை உருக்கி விட்டது. இதற்கு நீ என்ன அழகான உரை எழுதியிருக்கிறாய்! இந்தப் பாடலில் நான் பாடல் கருத்தை மட்டுமல்ல, உன்னையும் உணருகிறேன்!

    ReplyDelete
  2. பாடலும் அருமை. உங்கள் உரையும் அருமை. பட்டர் அபிராமியை எவ்வளவு அனுபவித்தாரோ அந்த அளவு நீங்கள் பட்டரை அனுபவிக்கிறீர்கள். மிக அருமையானப்பாடலை கொடுத்ததற்கு மிக மிக நன்றி.

    ReplyDelete
  3. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்னு சொல்லுவாங்க. அபிராமி அந்தாதிக்கு என்ன சொல்ல?
    என்ன ஒரு பாடல் என்ன ஒரு விளக்கம். பாரதிதாசன் மாதிரி உனக்கு அபிராமி பட்டர் தாசன் பேர் சூட்டலாம்

    ReplyDelete