Pages

Tuesday, October 2, 2012

கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது


கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது 


கணவனுக்காக, மனைவிக்காக, குழந்தைகளுக்காக, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, வேலை செய்யும் நிறுவனத்திற்காக என்று நாம் மற்றவர்களுக்காகவே நம் வாழ்நாளை செலவிட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்போது நமக்காக வாழ்வது ? இவ்வளவும் இல்லாவிட்டால் நாம் என்ன செய்து கொண்டிருப்போம் ?

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான். 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது. 

நமக்குத்தான் எத்தனை நரை முடி. அது எவ்வளவு சொல்கிறது. எங்கே கேட்கிறோம். பத்தா குறைக்கு அதன் மேல் சாயத்தை பூசி மறைக்கிறோம்.

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல்...


‘மன்னனே! அவனியை
     மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
     புரி பருவம் ஈது’ என, 
கன்ன மூலத்தினில்
     கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
     வெளுத்தது - ஓர் மயிர்.

பொருள்:

‘மன்னனே! = மன்னவனே 

அவனியை = இந்த உலகத்தை, இந்த அரசை

மகனுக்கு ஈந்து, = உன் மகனிடம் தந்து விட்டு

நீ = நீ

பன்ன அருந்தவம் = செய்வதற்கு அறிய தவம்

புரி = புரிய, செய்ய

பருவம் ஈது = சரியான காலம் இது

என = என 

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

கழற = அதட்டி சொல்ல, கண்டித்து சொல்ல

வந்தென = வந்தது போல வந்தது

மின் எனக் = மின்னலைப் போல, வெண்மையாக, ஒரு ஒளிக் கற்றை போல

கருமை போய் = கருமை நிறம் போய்

வெளுத்தது  = வெண்மையாக வந்தது

ஓர் மயிர் = ஒரே ஒரு முடி

அடுத்த முறை கண்ணாடி பார்க்கும் போது , உங்கள் நரை முடி என்ன சொல்கிறது என்று செவி மடுத்து கேளுங்கள். அந்த நரை முடிக்கும் காதுக்கும் ரொம்ப தூரம் ஒண்ணும் இல்லை.


4 comments:

  1. எனக்கு நரை முடி 40 வயதிலேயே வந்து விட்டது. அதற்காகக் கானகம் போக முடியுமா?! மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லையே!

    ReplyDelete
  2. Do you know what happened when he listened to his hair!!!

    ReplyDelete
  3. Interesting! He also listened to his beautiful wife! :)

    ReplyDelete
  4. உடலில் கடைசியில் முளைக்கும் முடி காதில் ....அது நரைக்கும் பொழுது நமது உடல் முழுவாழ்வு வாழ்ந்ததாகப் பொருள்.

    ReplyDelete