அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்
நாம் சில சமயம் நல்லது நினைத்து செய்யும் காரியங்கள் வேறு விதமாக முடிந்து விடுவது உண்டு.
அமுதம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள்.
அமுதோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது.
என்ன செய்வது ?
நமக்கு அமுதம் வேண்டும், நஞ்சு வேண்டாம்.
பொருள்களும், உறவுகளும் வேண்டும்...அவற்றினால் வரும் துன்பம் வேண்டாம்.
ஐயோ, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று மனிதன் இறைவனிடம் சென்று புலம்புகிறான்.
அவன் அளவற்ற அருளாளன்.
நஞ்சை எடுத்து விழுங்கி விட்டான்.
நம் துன்பங்களை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்.
அவன் மனைவி, அபிராமி, அவனை விடவும் அன்பு மிகுந்தவள். அவன் அருந்திய நஞ்சை அவன் தொண்டையில் நிறுத்தினாள். அந்த நஞ்சை அமுதமாக மாற்றினாள்.
"அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை" அவள்.
அவள் ரொம்ப அழகானவள்.
அழகு என்றால் இப்படி அப்படி அல்ல.
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அபிராமி பட்டார் அவள் அழகில் வைத்த கண் எடுக்காமல், எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
அவளுடைய கண், புருவம், இதழ், கழுத்து என்று பார்த்துக் கொண்டே வந்தவர், அவளின் மார்பக அழகில் லயித்துப் போகிறார். காமம் கடந்த, காதல் கடந்த, அந்த அழகில் தன்னை மறந்து கரைகிறார்.
இந்த பெரிய மார்புகளை அந்த சிறிய இடை எப்படி தான் தாங்குகிறதோ என்று வருந்துகிறார்.
"...முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல்.." மருங்குல் என்றால் இடை.
அவள் உண்ணா முலை அம்மை. ஞான சம்பந்தருக்கு, ஞானப் பால், கிண்ணத்தில் கொடுத்தாள். அவளின் மார்பகங்கள் செப்புக் கலசத்தை கவிழ்த்து வைத்த மாதிரி இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று உரசுகின்றன.
"..செப்பு உரை செய்யும் புணர் முலையாள் ..."
அபிராமி பட்டர் எதையும் மறைக்க வில்லை. அவளின் கண்ணை மட்டும் பார்த்தேன், முகத்தை மட்டும் பார்த்தேன் என்று பொய் சொல்லவில்லை. அவர் அம்பிகையை அணு அணுவாக பார்த்து ரசிக்கிறார். அவளின் அழகில் தன்னை மறக்கிறார்.
அவள் எங்கே இருக்கிறாள் ? அவளுடைய விலாசம் ஏதாவது இருந்தால் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாம். அவள் நம் மனத்தின் உள்ளே இருக்கிறாள்.
சிப்பியின் உள்ளே மறைந்திருக்கும் முத்து மணி போல், நம் மனத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணி அவள். மன + உள் + மணி = மனோன்மணி
அவள் சுந்தரி - அழகானவள்.
அந்தரி - அந்தரத்தில் இருப்பவள்.
பாடல்
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
பொருள்
பொருந்திய = மூன்று காலங்களுக்கும் பொருந்தியவள், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களுக்கும் பொருந்தியவள்
முப்புரை = புரை என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள், அதுவும் எதிர் எதிர் பொருள் தரும் அர்த்தங்கள். இங்கு, சந்தேகமில்லால் என்று அர்த்தம் கொள்ளலாம். (புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது வள்ளுவம்)
செப்பு = செப்பு கலசங்கள் போல் உள்ள மார்பகங்கள்
உரைசெய்யும் = ஒன்றோடு ஒன்று உரசும். அல்லது செப்புக் கலசங்களை
கவிழ்த்து உறை போல் அணிந்தது மாதிரி உள்ள மார்புகள்
புணர் முலையாள், = அணைக்கின்ற மார்புகளை உடையவள்
வருந்திய வஞ்சி மருங்குல் = அந்த பெரிய மார்பகங்களின் பாரம் தாங்காமல் வருந்திய இடை கொண்ட
மனோன்மணி, = மனத்தின் உள்ளே ஒளி விடும் மணி போன்றவள்
வார் சடையோன் = சிவன்
அருந்திய நஞ்சு = உண்ட ஆலகால விஷத்தை
அமுது ஆக்கிய அம்பிகை, = அமுதமாக மாற்றிய அம்பிகை. அவள் கை பட்டாலே நஞ்சும் அமுதமாக மாறி விடும். அவ்வளவு அன்பு. அவ்வளவு கருணை.
அம்புயமேல் = தாமரை மலரின் மேல்
திருந்திய சுந்தரி = இருந்த சுந்தரி,
அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்
பாதம் என் சென்னியதே. = அவளுடைய பாதம் என் தலையின் மேல்
அபிராமி அந்தாதி புரிய வேண்டுமானால் நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக வேண்டும்
No comments:
Post a Comment