இராமாயணம் - நீ என்னை கட்டி அணை
இராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை.
என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான் ?
நீ என்னை கட்டி அணை என்கிறான். நமது பண்பாட்டில் , அணைப்பவன் ஒரு படி மேலே, அணைக்கப் படுபவன் ஒரு படி கீழே என்பது மரபு. கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தால் , அணைத்து தட்டிக் கொடுப்பவன் உயர்ந்தவன், தட்டி கொடுக்கபடுபவன் சிறியவன் என்பது முறை.
இங்கே இராமன் அவனே போய் அனுமனை கட்டி அணைக்கவில்லை. அனுமனைப் பார்த்து சொல்கிறான், நீ என்னை கட்டி அணை என்று. அனுமனுக்கு தன்னை விட ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான் இராமன். வேறு யாருக்கும் அவன் தராத இடம்.
பக்தனை கடவுள் உயர்த்தும் இடம்.
அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்றார் வள்ளலார்.
யான் உன்னை தொடர்ந்து சிக்கன பிடித்தேன் என்றார் மணிவாசகர்.
பக்தனுக்குள் கடவுள் அடங்கிய இடம்.
பாடல்
"மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை: பைம்பூண்
போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!' என்றான்.
பொருள்
மாருதி தன்னை = அனுமனை
ஐயன் = இராமன்
மகிழ்ந்து,=மகிழ்ச்சியுடன்
இனிது = இனிமையாக
அருளின் = அருளோடு
நோக்கி, = பார்த்து
ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? = உன்னை தவிர வேறு யார் எனக்கு உதவி செய்திட முடியும்
அன்று செய்த = நீ அன்று செய்த
பேர் உதவிக்கு = பெரிய உதவிக்கு
யான் செய் செயல் = நான் செயக்கூடிய செயல் ; நான் செயக்கூடிய கைம்மாறு
பிறிது இல்லை = வேறு ஒன்றும் இல்லை
பைம்பூண் = பசுமையான பொன்னால் ஆன பூணை
போர் உதவிய திண்தோளாய்! = போரில் உதவக் கூடிய தோளில் அணிந்தவனே
பொருந்துறப் புல்லுக!' என்றான். = என் தோளோடு தோள் சேரும்படி என்னை கட்டி அணை என்றான்
இராமன் சீதையிடமோ, லக்ஷ்மனனிடமோ, பரதனிடமோ அப்படி சொல்லவில்லை.
அனுமனுக்கு மட்டுமே கிடைத்த தனிச் சிறப்பு.
No comments:
Post a Comment