Pages

Thursday, November 29, 2012

கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு


கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு 


ஒரு பெரிய மலை. அந்த   மலையையை சுற்றி உள்ள சிறு சிறு பள்ளங்களில் நீர் நிறைந்து இருக்கிறது. அந்த மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காடு. காட்டில் நிறைய பழ மரங்கள். பழ மரங்களில் பழங்களை பறித்து தின்று தாவி விளையாடும் குரங்குகள்.   அந்த மலையில் இருந்து விழும் அருவி. விழுந்த அருவியில் இருந்து வரும் புது நீர், அங்குள்ள பள்ளங்களில், சுனைகளில் தேங்கி இருக்கும் பழைய நீரோடு கலந்து வெளியேறும். அருவியில் இருந்து நீர் விழும் போது அதோடு சில கனிகளும் சேர்ந்து விழும். இந்த குரங்குகள் அந்த கனிகளை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும். பின் சினம் ஆறி அந்த கனிகளை உண்ணும். அருவி வரும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என் காதலன். அவனைக் காண என் மனம் ஆசையில் தேம்புகிறது. 

பாடல் 


பாசிப் பசுஞ்சுனைப் பாங்க ரழிமுது நீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட் டோடும் படுகன் மலைநாடற்
காசையிற் றேம்புமென் னெஞ்சு

சீர் பிரித்த பின் 

பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர்
காய் சின மந்தி பயின்று கனி சுவைக்கும் 
பாசம் பட்டு ஓடும் படுகல்  மலை நாடற்கு
ஆசையில் தேம்பும் என் நெஞ்சு 

பொருள் 

பாசி = பாசி படர்ந்த

பசும் சுனை = பசுமையாக காணும் சுனை (சிறு நீர் தேக்கம்)

பாங்கர் = பக்கத்தில் (இருந்து வழிந்து  வந்த அருவியில்) 

அழி = அழிக்கும்

முது நீர் = பழைய (தேங்கிய நீர்) நீர் 

காய் சின = சூடான கோவம் கொள்ளும் 

மந்தி = குரங்குகள்

பயின்று = அறிந்து

கனி சுவைக்கும் = கனிகளை சுவைக்கும்
 
பாசம் பட்டு ஓடும் = புது நீர் வரவால், சுனையில் உள்ள பாசிகள் விலகி ஓடும். அல்லது,அந்த பாசியின் மேல் பட்டு ஓடும் புது நீர்
 
படுகல்  மலை நாடற்கு = அப்படி பட்ட தண்ணீர் பட்டு வரும் கற்களை கொண்ட மலை நாட்டினை சேர்ந்த அவனுக்கு  (அதுதாங்க மலை, அல்லது குன்று)

ஆசையில் தேம்பும் என் நெஞ்சு = ஆசையில் தேம்பும் என் நெஞ்சு 

தேம்புதல் = விழி நீர் மல்க அழுதல், நினைத்து நினைத்து அழுதல், கண்ணில் நீர் வராவிட்டாலும் மனம் கேவுதல்.

எங்கள் ஊரில் என்னை பெண் கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுக்குள் சண்டை (குரங்குகள் பழத்திற்காக சண்டை இட்டுக் கொள்ளுதல் உதாரணம்). நாங்கள் வெளியில் பெண் கொடுப்பது இல்லை (தேங்கி கிடக்கும் நீர் உதாரணம்). நீ வந்து என்னை மணந்து கொள்  (புது நீர் வரும் போது,  பழைய நீர் விலகி செல்வது இயல்பு ). உனக்காக என் நெஞ்சு தேம்புகிறது. வருவாயா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.


1 comment:

  1. அப்பாடி! கடைசிப் பத்தியைப் படிக்கும் வரை, இதற்கு இப்படியும் உள்ளர்த்தம் உண்டு என்று எனக்குத் தோன்றவே இல்லை. மிக அருமை.

    ReplyDelete