இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
பெண்களுக்கு பிறந்த வீட்டை வருவது கடினமான செயல். என்னதான் புகுந்த வீட்டுக்குப் போக ஆசை இருந்தாலும், பிறந்த வீட்டை சந்தோஷமாக விட்டு விட்டு போக மாட்டார்கள். ஆனால் திருமகள் கதை வேறு. அவள் தன் பிறந்த இடமான தாமரை மலரை விட்டு, திருமாலின் மார்பில் வந்து வாழ சந்தோஷமாக வந்தாளாம். நிறைய பெண்கள் கணவன் வீட்டில் இருப்பார்கள். மனம் எல்லாம் பிறந்த வீட்டிலேயே இருக்கும். புகுந்த வீட்டில் பொருந்தாது. திருமகள் வந்து பொருந்திய மார்பன் திருமால்.
புகழ் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. கிடைப்பது அரிது. கிடைத்த பின் அதை தக்க வைத்துக் கொள்வது அதனினும் அரிது. அப்படிப்பட்ட புகழ் நம்மாழ்வார்க்கும் அவர் பாடல்களிலும் மலிந்து கிடந்தது. அவ்வளவு புகழ்.
அப்படி பட்ட நம்மாழ்வாரின் பாதம் பணிந்து வாழ்தவர் பல கலைகளை கற்று தேர்ந்த இராமானுஜர்.
அப்படிப் பட்ட இராமனுஜரின் பாதரா விந்தங்களில் நாம் வாழ அவன் நாமங்களையே சொல்லுவோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்னது போல, அவன் நாமங்களைக் ஜெபித்து, அவன் திருவடிகளை அடைவோம்.
பாடல்
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
பொருள்
பூமன்னு = (தாமரை) பூவில் நிரந்தரமாக வசிக்கும்
மாது = திருமகள்
பொருந்திய மார்பன் = எல்லாவிதத்திலும் பொருந்திய மார்பன் (made for each other)
புகழ்மலிந்த = புகழ் நிறைந்த
பாமன்னு = நீண்டு நிலைக்கும் பாசுரங்களை தந்த
மாற னடிபணிந் து = மாறன் (நம்மாழ்வார்) அடி பணிந்து
உய்ந்தவன் = வாழ்ந்து வந்தவன்
பல்கலையோர் = பல கலைகளும்
தாம்மன்ன வந்த = அவைகளே அவனிடம் வந்து நிலை பெற்று இருக்க
ராமாநுசன் = இராமானுஜன்
சரணாரவிந்தம் = பாதார விந்தங்களை
நாம்மன்னிவாழ = நாம் அடைந்து வாழ
நெஞ்சே = என் மனமே
சொல்லுவோமவன் நாமங்களே = சொல்லுவோம் அவன் நாமங்களே
பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் எல்லாம் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது நீங்கள் நேசிப்பவரின் பெயரை மெல்ல உச்சரித்துப் பாருங்கள்...பெயர் இனிக்கும்.
இராமா உன் நாமம் எவ்வளவு ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகராஜர்
(
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || )
முதலில் அவன் பெயரைக் கேட்டாள், பின் அவன் குணங்களை கேட்டாள், பின் அவன் இருக்கும் ஊரைக் கேட்டாள்..பின் அவன் மேல் பைத்தியமாய் ஆனாள் என்று உருகுகிறார் நாவுக்கரசர்....
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
Fantastic explanation.What you have writtten is the main song.Two more Thaniyans are there.One is 'Nayantharu Perinba mellam Palzhuthendru'.second one 'Sollin Thogai Konduthanadipoothukku'.Please write meaning for the Thaniyan.Thanks.
ReplyDelete"மன்னு" என்ற சொல் பலவித அர்த்தங்களில் மீண்டும் மீண்டும் வருவது நன்றாக இருக்கிறது.
ReplyDelete