Pages

Sunday, February 10, 2013

புற நானூறு - இலையின் கீழ் நத்தை


புற நானூறு - இலையின் கீழ் நத்தை 

எங்கு பார்த்தாலும் பயங்கர வெயில்.  சுட்டு எரிக்கிறது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு கிளை பரப்பி நிற்பதைப் பார்த்தால் மழை வேண்டி வான் நோக்கி கை விரித்து வேண்டுவது போல இருக்கிறது. கோடை மழை வந்த பாடில்லை. 

குளம் குட்டைகளில் நீர் வற்றி சேறும்  சகதியுமாய் இருக்கிறது. அந்த சகதியும் சூடாக இருக்கிறது. 

ஒதுங்க இடம் இல்லை. அந்த குளத்தில் ஒரு நத்தை வசித்து வந்தது வெயில் அதையும் வாட்டியது. வெயிலுக்கு பயந்து அதால் ஓட முடியாது. வெப்பம் தாங்கமால் தவித்தது. 

அந்த குளத்தில் முளைத்து இருந்த ஆம்பல் செடியின் இலையின் கீழ் மெல்ல ஊர்ந்து சென்று வெயிலின் இருந்து தன்னை காத்துக் கொண்டது. 

மன்னா, வறுமை என்னும் வெயில் என்னை வாடுகிறது. என்னால் வேறு எங்கும் செல்லவும் முடியாது. வீட்டுக்கு யாராவது வந்து விட்டால் அவர்களை  எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் நான் ஒளிந்து கொள்கிறேன் .

உன்னிடம் வந்து என் வறுமையை சொல்கிறேன். நீ என்னை ஆதரிப்பாய் என்று நினைக்கிறேன் 

பாடல்  


பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே.


பொருள் 

பயங்கெழு மாமழை பெய்யாது = பயன் தரும் பெரிய மழை பெய்யாது 

மாறிக் = மாறி 

கயங் = குளம்

களி = குளத்தில் உள்ள சேறு களி  போல் ஆகி 

முளியும் = வேகும் 

கோடை ஆயினும் = கோடை ஆனாலும் 
,
புழற்கால் ஆம்பல் = துளையை உள்ள ஆம்பல் செடியின் 

அகலடை நீழல் =அகன்ற இலையின் நிழலில் 

கதிர் = சூரிய ஒளி 

கோட்டு = கொம்பு உள்ள 

நந்தின் = நத்தையின் 

சுரிமுக ஏற்றை = வளைந்து நெளிந்து செல்லும் ஆண்  நத்தை 

 நாகுஇள வளையொடு = பெண் சங்கொடு பகலில் கூடும் 

நீர்திகழ் கழனி = நீர் உள்ள  கழனிகளை , வயல்களை   

நாடுகெழு = உள்ள நாட்டை கொண்ட 

பெருவிறல் = பெரிய வெற்றிகளை கொண்ட 

வான்தோய் நீள்குடை = வான் வரை நீண்ட அதிகாரம் உள்ள 
,
வயமான் சென்னி = ஆற்றல் உள்ள சென்னி (அரசன் 

சான்றோர் இருந்த அவையத்து = சான்றோ உள்ள அவையில் 

உற்றோன் = உதவி வேண்டி வந்தவன் 

ஆசாகு = பற்றுதல் வேண்டி, உதவி என்று கேட்டு 
 
என்னும் பூசல்போல = பூசல் என்றால் அறிவித்தல். உதவி என்று அவையில் கேட்ட பின் 

வல்லே களை = விரைவாக அவன் துன்பத்தை களைய 

மதி அத்தை = அசை சொற்கள் 

உள்ளிய = நினைத்த 

விருந்துகண்டு = விருந்து வருவதை கண்டு 

ஒளிக்கும் = ஒளிந்து 

திருந்தா வாழ்க்கைப் = தவறு தான் என்றாலும் திருத்த முடியாமல் வாழும் வாழ்க்கை 

பொறிப்புணர் உடம்பில் தோன்றி = என்னுடைய மற்ற அவயங்கள் (பொறி) தோன்றி ஒழுங்காக இருந்தாலும் 
 
என் = என்னுடைய 

அறிவுகெட நின்ற = அறிவு மட்டும் தடுமாறுகிறது 

நல்கூர் மையே = காரணம் என் வறுமையே  (நல்  கூர்மை = வறுமை )

.
பாடல் எழதும் களம் எவ்வளவு முக்கியம் என்று இந்த பாடலில் இருந்து அறிய முடிகிறது.

வெயில் = வறுமை 

நத்தை = போராட வலிமை இல்லாத புலவன் 


ஆம்பல் இலை = அரசனின் இரக்கம் 

கொதிக்கும் குளம் = சுற்றமும் நட்பும்..நீர் இருந்தாலும் உதவி செய்ய முடியாத அவர்களின் வறுமை 

விருந்துக்கு ஒளிந்து கொள்ளுதல் = தமிழ் கலாசாரம். விருந்துக்கே ஒளிந்து கொள்வது என்றால் கடன் காரன் வந்தால் ?

அறிவு கெடுக்கும் வறுமை = யாசகம் கேட்பது தவறு என்று தெரிந்தாலும் அதை செய்ய தூண்டும் வரும் .

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் - வறட்சி, வறுமை, இவற்றை துல்லியமாக படம் பிடித்து காட்டும் பாடல். 

No comments:

Post a Comment