சிறுபாணாறு - வறுமை தோய்ந்த வீடு
அந்தக் காலத்திலும் வறுமை நம் மக்களை வாட்டி இருக்கிறது.
ஆண்களும் பெண்களும் வறுமையோடு போராடி இருக்கிறார்கள்.
எவ்வளவு வறுமை இருந்தாலும் தங்கள் பண்பாட்டையும், அற நெறியையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
வறுமையையை சமாளிப்பதில் பெண்ணின் பங்கு மிகப் பெரிதாய் இருந்து இருக்கிறது.
ஆற்றுப் படை என்பது தலைவனை அடைந்து பரிசுகள் பெற்ற புலவன் எதிரில் வருபவனை அந்த தலைவனிடம் செல்லும் வழியை கூறுவது. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல்.
சிறுபாணாற்று படை என்ற நூல் அந்தக் காலத்தில் உள்ள வறுமையையும் அதை ஒரு பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதையும் காட்டுகிறது.
அவள் வீடு ஒரு சின்ன குடிசை. சமைத்து நாட்கள் பல ஆகி விட்டன. வீட்டில் உள்ள அடுப்பில் நாய் படுத்து தூங்குகிறது. அதன் குட்டி அந்த நாயிடம் பால் குடிக்க முயல்கிறது. பாவம் அந்த நாயும் சாப்பிட்டு பல நாள் ஆனதால், அதனிடம் பால் இல்லை.
அந்த வீட்டின் பெண், அவர்கள் வீட்டில் உள்ள வேலியின் மேல் படர்ந்துள்ள கீரையை கிள்ளி எடுத்து (தண்டை பிடுங்கினால் மீண்டும் வளராதே, அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது ), அந்த கீரையையை உப்பில்லாமல் சமைத்து (உப்பு வாங்கக் கூட காசு இல்லை ), வீட்டில் உள்ளவர்களுக்கு பரி மாறுகிறாள் ... இது வெளியே தெரிந்தால் நன்றாக இருக்காது என்று கதவை சாத்திவிட்டு பரிமாறுகிறாள்
பாடல்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம்"
பொருள்
திறவாக் கண்ண = கண்ணை திறக்காமல்
சாய்செவிக் குருளை = சாய்ந்த காதை உடைய குட்டி
கறவாப் பான் முலை = இதுவரை யாரும் கறக்காத முலையில் இருந்து
கவர்தல் நோனாது = பால் அருந்துவதை அறியாத தாய் நாய்
புனிற்று நாய் குரைக்கும் = சப்த்தம் கூட போட வலு இல்லாத நாய்
புல்லென் அட்டில் = படுத்து கிடக்கும் அடுப்படியில்
காழ் சோர் = கட்டப்படாத விறகுகள் சிதறி கிடக்கும்
முது சுவர்க் = பழைய சுவர்
கணச் சிதல் அரித்த = செல் அரித்த அடுப்படி
பூழி பூத்த புழல் காளாம்பி = புழுதி படிந்த, ஈரமான காளான் நிறைந்த அடுப்படியில்
ஒல்கு பசி உழந்த = பசியால் மெலிந்த உடலை கொண்ட பெண் (உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை என்பது அபிராமி அந்தாதி )
ஒடுங்கு நுண் மருங்குல் = மெலிந்த இடையை கொண்ட
வளைக்கை கிணை மகள் = வளையலை அணிந்த கைகளை கொண்ட அந்தப் பெண்
வள் உகிர்க் குறைத்த = உகிர் என்றால் நகம். நகத்தால் கிள்ளி எடுத்து
குப்பை வேளை = குப்பையில் விளைந்த கீரை
உப்பு இலி வெந்ததை = உப்பு இல்லாமல் வேக வைத்து
மடவோர் காட்சி = பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காண்பார்களே என்று
நாணி கடை அடைத்து = நாணம் கொண்டு கதவை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு = ஒக்கல் என்றால் சுற்றத்தார். இரும்பேர் என்றால் பெரிய. பெரிய சுற்றாத்தாரோடு
ஒருங்கு உடன் மிசையும் = ஒன்றாக இருந்து உண்டு
அழி பசி வருத்தம் = பெரிய வருத்தத்தை தரும் பசியை போக்கினாள்
பாடலில் எவ்வளவு நுண்ணிய அர்த்தங்கள்....
- வறுமை
- அவ்வளவு வறுமையிலும் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள்
- வீட்டை சரியாக பராமரிக்க முடியாமல் செல் அரித்து கிடக்கும் அடுப்படி
- சுள்ளியும், விறகும் கிடக்கிறது
- கீரையை கிள்ளி எடுத்து வருகிறாள்
- உப்பு போடாத கீரை சமையல். அது மட்டும் தான் உணவு
- மற்றவர்கள் பார்த்தால் வெட்கக்கேடு என்று கதவை சாத்திக் கொள்கிறாள்
- அந்த ஏழ்மையிலும் ஒன்றாக இருந்து உண்கிறார்கள்.
- உறவு விட்டுப் போகவில்லை.
எதோ documentary படம் பார்த்த மாதிரி இருக்கிறது, இந்தக் கவிதையைப் படித்தபின்!
ReplyDeleteகாய் கறிகளை கொண்டு சமையல் செய்த இனம் பின் உப்பு இடாமல் சாப்பிட்டு இருக்கிறார்கள்.(உப்பு பயன் படுத்தாத காலம்)
ReplyDelete