Pages

Monday, February 11, 2013

வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம்


வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம் 


பாரதப் போர் தொடங்குவதற்கு முன் கண்ணன் தூது போகிறான். பாண்டவர்கள் சார்பாக, துரியோதனனிடம். 

வில்லிபுத்துராழ்வார் அந்த சருகத்தை தொடங்குமுன் பாயிரம் போல் முதல் பாடல் பாடுகிறார். 

இறைவனின் புகழைச் சொல்லி, அவன் அடியார்களின் திருவடிகளை தொழுவோம் என்கிறார் 

படிக்க கொஞ்சம் கடினம் தான். பதம் பிரித்தால் எளிதாக இருக்கும்.

தேன்  போல் அர்த்தம் சொட்டும் தமிழ். படிக்க படிக்க தெவிட்டாத தமிழ். 

முதலில் பாடலைப் பார்ப்போம் 


அராவணைதுறந்துபோந்தன்றசோதைகண்களிப்பநீடு
தராதலம்விளங்கவெண்ணெய்த்தாழிசூழ்தரநின்றாடிக்
குராமணங்கமழுங்கூந்தற்கோவியர்குரவைகொண்ட
புராதனன்றனையேயேத்தும்புனிதர்தாள்போற்றிசெய்வாம்.

கொஞ்சம் கரடு முரடாய் தெரிகிறதா ? சீர் பிரிப்போம் 

அரா அணை  துறந்து போந்து அன்று யசோதை கண் களிப்ப நீடு 
தரா தலம் விளங்க வெண்ணெய் தாழி சூழ்தர நின்று ஆடி 
குரா  மணம் கமழும் கூந்தல் கோபியர் குரவை கொண்ட 
புராதனன் தன்னையே ஏத்தும் புனிதர் தாள் போற்றி செய்வாம் 

பொருள் 


அரா அணை  துறந்து = பாம்பு அணையை துறந்து 

போந்து = போய் 

அன்று = அன்று 

யசோதை கண் களிப்ப = யசோதையின் கண்கள் களிக்க 

 நீடு = நீண்ட, பெரிய 

தரா தலம் விளங்க = உலகம் விளங்க 

வெண்ணெய் தாழி = வெண்ணெய்  நிரம்பிய தாழியை 
 
சூழ்தர = சூழ்ந்து  

 நின்று ஆடி = நின்று ஆடி 
 
குரா  மணம் கமழும் = குரவை பூவின் மனம் கமழும் 

கூந்தல் கோபியர் = கூந்தலை கொண்ட கோபியர் 

குரவை கொண்ட = குரவை பாடல் பாடிக் கொண்டாடும்  
 
புராதனன் = பழமையானவன், ஆதி மூலம் 
 
தன்னையே ஏத்தும் = அவனை மட்டுமே போற்றும் 

புனிதர் தாள் = புனிதர்களின், பக்தர்களின்  பாதங்களை 
 
போற்றி செய்வாம் = போற்றுதல் செய்வோம் 

1 comment:

  1. WOW!முதல் பாடலே அற்புதம்!பக்தர்கள் புனிதர்கள்-what a thought.

    ReplyDelete