இராமாயணம் - நல் வழி செல்லும் மனம்
இராமன் மிதிலை நகர் வருகிறான். கன்னி மாடத்தில் சீதை நிற்பதை காண்கிறான். அவன் மனம் அவள் பால் விடுகிறது. அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள்.
காதல் அரும்பியது
இதயம் இடம் மாறியது
இரவில் தனிமையில் இருக்கும் போது இராமன் யோசிக்கிறான்.
நாம அந்த பெண்ணை விரும்பினோம். ஒரு வேளை அவள் திருமணம் ஆன பெண்ணாய் இருந்தால் ? பிறன் மனை நோக்குவது தவறு அல்லவா ? எனக்கு எப்படி அப்படி ஒரு ஆசை வரலாம் ? என்று யோசிக்கிறான்.
பின் அவனே சொல்கிறான்....என் மனம் தவறான வழியில் போகவே போகாது. என் மனம் விரும்பியதால் அவள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
எவ்வளவு நம்பிக்கை இராமனுக்கு தன் மேல் !
பாடல்
ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!
பொருள்
ஆகும் நல்வழி = நல்ல வழி ஆகும்
அல்வழி என் மனம் ஆகுமோ? = (நல் வழி ) அல்லாத வழியில் ஆகுமோ என் மனம்
இதற்கு ஆகிய காரணம் = இதற்கு ஆகிய காரணம் (நான் அவள் மேல் காதல் கொள்ளக் காரணம்)
பாகுபோல் மொழிப் = சர்க்கரை பாகு போன்ற இனிய மொழியை உடைய
பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த அந்தப் பெண்
கன்னியே ஆகும் = கன்னியே. திருமணம் ஆகதவளாகத்தான் இருக்க வேண்டும். . கன்னியே ஆகும் என்று உறுதியாக சொல்லுகிறான்.
வேறு இதற்கு ஐயுறவு இல்லையே! = இதில் எந்த சந்தேகமும் இல்லை
இராமனுக்குத் தன் மேல் நம்பிக்கை இருக்கலாம். சினிமா நடிகை முதல், தெருவில் போகும் பெண்கள் வரை எல்லோரையும் சைட் அடிக்கும் நமக்கு இப்படி நம்பிக்கை வர வழியே இல்லை!
ReplyDelete