அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
அபிராமி அந்தாதியின் முதல் பாடல்.
இறைவனை பாடும் போது திருவடிகளில் தொடங்கி திருமுடியில் முடிப்பதும், இறைவியை பாடும் போது திருமுடியில் தொடங்கி பாதத்தில் முடிப்பதும் மரபு
நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பிப்பார் திருவாசகத்தில் மாணிக்க வாசகர்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.
மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள் போற்றி என்று ஆரம்பிக்கிறார் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில்
இறைவியையை பாடும் போது தலையில் இருந்து ஆரம்பிப்பது மரபு.
அந்த மரபின் படி, அபிராமி பட்டர் இங்கே அபிராமியின் தலையில் இருந்து ஆரம்பிக்கிறார்.
சிறிது நேரம் கண்ணை மூடி உங்கள் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்துப் பாருங்கள்.
மூடிய கண்களில் என்ன நிறம் கோலம் போடுகிறது ? சிவப்பு நிறம் தானே ? அபிராமியின் அழகில் தன்னை மறந்து லயித்து இருக்கும் பட்டருக்கு எல்லாம் அவளாகத் தெரிகிறது. எல்லாம் சிவப்பாகத் தெரிகிறது.
உதிக்கின்ற செங்கதிர் - அதிகாலை சூரியன். வெளிச்சம் தரும், சுடாது. எரிக்காது. அவள் கருணை அப்படித்தான்.
வாழ்க்கைக்கு ஒளி காட்டி வழி காட்டும்.
சுடாது.
எரிக்காது.
அஞ்ஞான இருள் விரட்டி, மெய்ஞான ஒளி ஏற்றும்.
உதிக்கின்ற செங்கதிர். சூரியனை நம் கண்ணால் நேரடியாக காண முடியாது. காலை நேர சூரியனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். அபிராமி அறிவுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும், அவளை தியானித்தால் காண முடியும் என்பது உட்பொருள்
உச்சித் திலகம் - உச்சியில் இடுகின்ற குங்கும திலகம். அவள் நெற்றியில் இடுகின்ற திலகம் உதிக்கின்ற செங்கதிரைப் போல சிவப்பாக இருந்தது
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = மாணிக்கக் கல் சிவப்பு. உயர்ந்தது.
எவ்வளவு தான் உயர்ந்தாக இருந்தாலும் அதன் மதிப்பு எல்லோருக்கும் தெரியாது.
கழுதையின் கழுத்தில் கோஹினூர் வைரத்தை கட்டி விட்டால் அதற்கு அதன் மதிப்பு தெரியுமா ? எனவே, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்றார். அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லவில்லை. அவள் அறிவுக்கு அப்பாற்பட்டவள். உணர்வு உடையோர் அவளின் மதிப்பை அறிவார்கள்
மாதுளம்போது = மாதுளம் மலர்
மலர்க்கமலை = மாதுளம் மலர் போன்ற தாமரை. சிவந்த தாமரை. வெண் தாமரை அல்ல
துதிக்கின்ற மின் கொடி = மின்னல் கொடி போன்ற உருவம் உடையவள்
மென் கடிக் குங்கும தோயம் = மென்மையான குங்குமத்தில் தோய்த்து எடுக்கப் பட்டதை போன்ற சிவந்த வடிவம் உள்ளவள்
என்ன = என்ற
விதிக்கின்ற மேனி அபிராமி = அப்படி எல்லாம் நூல்களில் மறைகளில் சொல்லப்பட்ட மேனி அழகை உடையவள்
எந்தன் விழுத் துணையே = அவள் எந்தன் விழுத் துணையே.
ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை
சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது, சிக்கலானது, ஆபத்து நிறைந்தது. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை விட்டுறாதீங்க....
WOW!Enna oru Bhakthi Bhattarukku.உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் and எந்தன் விழுத் துணையே -Your Villakams are too good.
ReplyDeleteவார்த்தைகள் இல்லை நன்றி சொல்ல. அருமையான பாடலுக்கு மிக மிக அருமையான விளக்கம் .
ReplyDeleteஅபிராமி அருள்வாளா இல்லையா தெரியாது.ஆனால் உங்கள் விளக்கத்தினால் இதை படிப்பவர்களுக்கு அவள் கையை பற்றிக்கொண்டு வாழ்க்கைப் பாதையை கடக்க ஒரு தைரியம் வரும்.நன்றி
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் - நல்ல விளக்கம். நன்றி.
ReplyDeleteஅழகான, அனுபவிக்கத் தூண்டும் விதமான, எளிமையான அதே சமயம் ஆழ்ந்த விளக்கம். இது ஒரு தூண்டுகோல். பற்பல அனுபவங்களைத் தூண்டுகிறது. நன்றிகள் பல.
ReplyDeleteஇந்த பாடலின் விளக்கம் மிகவும் அருமை.எளிமையாக உள்ளது.
ReplyDeleteஎல்லா பாடல்களின் விளக்கமும் எவ்வாறு காணலாம்?
ReplyDelete