திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கேள்விப் பட்ட குறள் தான்.
தன்னுடைய மகனை சான்றோன் என்று மற்றவர் கூறக் கேட்ட தாய், அவனை பெற்ற பொழுதை விட அதிகமாக சந்தோஷப் படுவாள்.
அவ்வளவுதானா ?
கொஞ்சம் சிந்திப்போம்.
மகன் பெரிய ஆள் என்று கேட்டால் தந்தைக்கு உவகை வரதா ?
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை
என்று ஏன் சொல்லவில்லை ?
மகன் எவ்வளவு தான் பெரிய ஆள் ஆனாலும் தாய்க்கு அவன் எப்போதும் சின்ன பிள்ளை தான். ஊர்ல நூறு பேரு நூறு விதமா சொல்லலாம், தாய்க்கு அவளுடைய பிள்ளைஎப்போதுமே அவள் மடியில் தவழும் சின்ன பிள்ளை தான். தந்தைக்குத் தெரியும்...பையன் வளர்வது, படிப்பது, பட்டம் வாங்குவது, வாழ்வில் முன்னேறுவது எல்லாம்....தாய்க்கு அவள் பிள்ளை எப்போதுமே பால் மணம் மாறாத பாலகன் தான்.
பாத்து போப்பா, ரோடு எல்லாம் பாத்து கிராஸ் பண்ணு, வேளா வேளைக்கு சாப்பிடு, ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதே என்று சொல்லிக் கொண்டு இருப்பாள் ...அவன் பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் இருப்பான் ...அவனுக்கு கீழே ஆயிரம் பேர் இருப்பார்கள்...என்ன இருந்து என்ன, அவன் அம்மாவுக்கு அவன் சின்னப் பையன் தான்....
அவனை சான்றோன் என்று சொன்னால்...அவளுக்கு இரண்டு விதமாமான மகிழ்ச்சி....ஒன்று நம்ம பிள்ளை பெரிய ஆள் ஆகிவிட்டானே என்று..இன்னொன்று...யாரு, இந்த வாண்டா பெரிய ஆளு என்று இன்னொரு மகழ்ச்சி...
எனவே ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்...
இன்னொரு காரணம்.....
ஒரு தாய்க்கு மிக பெரிய மகிழ்ச்சி எப்போது வரும்....பத்துமாதம் சுமக்கிறாள்...படாத பாடு படுகிறாள்...வலியின் உச்சத்தில் பிள்ளையை பெறுகிறாள்...அப்போது மருத்துவர் "பிள்ளை ஆரோகியமா நல்லபடியா பிறந்திருக்கு " அப்படின்னு சொன்னவுடன் ஒரு பெரிய நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும் அந்த தாய்க்கு. அது போல் அவன் வளர்ந்து பெரிய ஆள் ஆன பின், அதைவிட மகிழ்ச்சி பிறக்கும்.
முதலில் கை கால் ஆரோக்கியத்துடன் குழந்தையாய் பிறப்பிப்பது.
இரண்டாவது சான்றோனாய் பிறப்பிப்பது.
இரண்டு மகிழ்ச்சியான நேரங்கள். பின்னது முன்னதை விட சிறப்பாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
மூன்றாவது, ஈன்ற பொழுது என்பது தாய்க்கு உண்டு. தந்தைக்கு கிடையாது. தாய் பத்து மாதத்தில் இறக்கி வைத்து விடுவாள். தந்தை அந்த சுமையை கடைசி வரை தூக்கித் திரிவான். சான்றோனாக்குவது தந்தைக்கு கடன் என்பார் வள்ளுவர். அவன் மகனை இறக்கி வைப்பதே இல்லை. எனவே, ஈன்ற பொழுது என்பது தந்தைக்கு கிடையாது. மேலும் மேலும் மகனை முன்னேற்றுவதிலேயே குறியாய் இருப்பான் தந்தை.
பரிட்ச்சைக்கு படிக்கிறான் என்றால், அம்மா சொல்லுவாள் "ரொம்ப நேரம் முழிச்சு இருந்து உடம்ப கெடுத்துகாத " என்று. தந்தைக்கு அந்த பாசம் இருக்கும். இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் , "எல்லாம் படிச்சிட்டியா...அதுக்குள்ள என்ன தூக்கம் " என்று அவனை மேலும் உயர்ந்தவனாக்க பாடு படுவார்
தாய்க்கு, பிள்ளை சந்தோஷமா இருக்கணும்..
தந்தைக்கு, பிள்ளை பெரிய ஆளா வரணும்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
எவ்வளவு நுட்பம்
எவ்வளவு அர்த்த செறிவு
நவில் தொறும் நூல் நயம் போலும்.....
சான்றோன் ஆக்குவது தந்தை மட்டுமே, தாய் அல்ல, என்ற பொருள் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
ReplyDelete