இராமாயணம் - ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ?
காப்பியத்தை அதன் போக்கிலேயே சென்று இரசிப்பது ஒரு வகை.
காப்பியத்தின் போக்கு வேறு விதமாக போய் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இரசிப்பது இன்னொரு வகை.
உதாரணத்திற்கு ஒன்றிண்டை சிந்திப்போமா ?
தசரதன் இராமனை கானகம் போகச் சொன்னான். இராமன் அதை ஏற்றுக் கொண்டு கானகம் போனான்.
ஒரு வேளை இராமன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ?
ஒரு வேளை இராமன் "இந்த இராஜ்ஜியம் எனக்கு உரியது. நான் இதை ஏற்க்க மறுத்தால் அது முறை அன்று. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். வேண்டுமானால் பரதனை கூப்பிடுங்கள். கேட்டு விடுவோம்....அவனுக்கு இது சம்மதமா"" என்று இராமன் ஆரம்பித்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் ?
முதலில், தசரதன் வாய்மை தவறினான் என்ற பழிச் சொல் வந்திருக்கும் கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவன் என்ற பழி வந்து இருக்கும்.
இரண்டாவது, தசரதனை தந்தையாகப் பார்க்காமல் அரசனாகப் பார்த்தால், இராமன் அரச ஆணையை மீறினான் என்ற குற்றம் வந்து சேரும். நாளை இராமன் பதவி ஏற்றப் பின் ஒரு ஆணை பிறப்பித்தால் அதை யாரும் மதிக்க மாட்டார்கள். இராமன் அரசாணையை மீறலாம் என்றால் மற்றவர்கள் ஏன் மீறக் கூடாது ?
மூன்றாவது, இராஜியத்தில் உள்ள பிள்ளைகள் யாரும் தந்தை சொல் கேட்க்க மாட்டார்கள். இராமனே கேட்க்கவில்லை, நாங்கள் ஏன் கேட்க்க வேண்டும் என்று அந்த பிள்ளைகள் கேட்டால் என்ன பதில் சொல்லுவது ? அன்று மட்டும் அல்ல...இன்று வரை பிள்ளைகள் அதையே சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இராமன் என்பவன் இந்த கலாசாரத்தின் ஒரு அடையாளமாக இல்லாமல் போய் இருப்பான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இராமாயணத்தை பற்றி சொல்லவே மாட்டார்கள்
நான்காவது, இராமனுக்கு தசரதன் மேல் அவ்வளவு ஒன்றும் அன்பு இல்லை என்று ஆகும். "போய்யா , உனக்கு ஒரு வேலை இல்லை " என்று இராமன் சொல்லி விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு இடையே நல்ல உறவு இல்லை என்றே ஆகி இருக்கும். தசரதன் நல்ல தந்தை இல்லை, இராமன் நல்ல மகன் இல்லை என்றே ஆகி இருக்கும்.
இராமன் தன் சுகம், தன் சந்தோஷம் மட்டும் நினைக்க வில்லை. வரும் கால காலத்திற்கு தன் செயல் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு செயல் பட்டிருக்கிறான் என்பது புரியும்.
இதை எல்லாம் ஏதோ நான் சொந்தமாக சிந்தித்து சொல்வதாக நினைக்காதீர்கள்....வால்மீகியும், கம்பனும் இதை எல்லாம் சிந்தித்து மட்டும் அல்ல சொல்லி விட்டே போய் இருக்கிறார்கள்....நான் அதை எடுத்துச் சொல்கிறேன்..அவ்வளவு தான்.
இலக்குவனை இராமன் சமாதனப் படுத்தும் இடம்....
பாடல்
நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்.
பொருள்
நன் சொற்கள் தந்து ஆண்டு = என் தந்தை (தசரதன் ) என்னை நல்ல சொற்கள் சொல்லியே வளர்த்தான். என்னை கோபித்தது இல்லை. கடிந்து ஒரு வார்த்தை சொன்னது இல்லை. திட்டியது இல்லை. சபித்தது இல்லை. நல்ல சொற்களை மட்டுமே தந்தான்.
எனை நாளும் வளர்ந்த தாதை = நல்ல சொல் தந்தான். சரி. எப்பவாவது திட்டி இருப்பானா ? எப்பவாவது கண்டிந்து ஒரு வார்த்தை சொல்லி இருப்பானா என்றால் இல்ல. "நாளும் எனை வளர்த்த தாதை". ஒவ்வொரு நாளும் என்னை அப்படியே வளர்த்தான். நல்ல தந்தை பிள்ளைகளுக்கு நல்லன சொல்லி வளர்க்க வேண்டும். தசரதன் மேல் இராமனுக்கு அவ்வளவு வாஞ்சை.
தன் சொல் கடந்து = அவன் சொன்ன சொல்லை கடந்து, தாண்டி
எற்கு அரசு ஆள்வது = எதற்கு அரசு ஆள்வது ? அப்படி ஒரு அரசு வேண்டுமா ? அப்படி ஒரு அரசை ஆண்டு நான் என்ன சாதிக்கப் போகிறேன். தந்தையின் வார்த்தையை விட இந்த இராஜ்ஜியம் பெரிதா ? இல்லவே இல்லை.
தக்கது அன்றால் = சரியானது என்றால் ?
என் சொல் கடந்தால் = (இலக்குவா) நான் சொல்லும் சொல்லை தாண்டினால்
உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் = உனக்கு என்ன சிறப்பு. இழிவு தான் மிஞ்சும்
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான் = அப்படி சொன்னவன் யார் ? தென் சொல் (தமிழ்), வட சொல் (சமஸ்கிரிதம்) என்று இரண்டு மொழிகளில் உள்ள எல்லா கலைகளையும் கற்று தேர்ந்து அவற்றிற்கு அப்பால் சென்றவன்.
இராமனுக்கு தமிழும் தெரியும் என்பது ஒரு கொசுறு செய்தி.
தந்தை மகனை எப்படி வளர்க்க வேண்டும்,
மகன் தந்தையை எப்படி மதிக்க வேண்டும்,
அண்ணன் தம்பியை எப்படி நடத்த வேண்டும்,
தம்பி எப்படி அண்ணன் மேல் மரியாதையுடன் இருக்க வேண்டும்
ஒரு பாடலில் எவ்வளவு செய்தி....
அருமையான பாடல். மிகவும் ரசிக்கத் தகுந்த விளக்கவுரை. இப்படி ஒரு கம்ப ராமாயணப் பாடலை நான் இதற்க்கு முன்பு கேட்டது இல்லை. நன்றி.
ReplyDelete