Pages

Saturday, February 23, 2013

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை 


பிறந்தது முதல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது. 

அபிராமி பட்டர் பட்டியல் போடுகிறார்....

பாடல் 


மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி 
     ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, 
     மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் 
     துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், 
     பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, 
     வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை 
     நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! 
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! 
     அருள் வாமி! அபிராமியே! (11) 


பொருள்
 


மிகையும் துரத்த = மிகையானவை துரத்த. அது என்ன மிகையும் துரத்த ? மிகை என்றால் அதிகம். நம்மை விட வயதில் அதிகமானவர்கள் (பெற்றோர், அண்ணன், அக்கா), அறிவில் மிகுந்தவர் (வாத்தியார்), பதவியில் பெரியவர்கள் (அலுவகலத்தில் உயர் அதிகாரிகள்)....இவர்கள் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்...இதை செய், அதை செய்யாதே என்று.


வெம் பிணியும் துரத்த = பிணி நம்மை விரட்டுகிறது. எங்க ஓடுற, நில்லு, வந்து உன்னை பிடிக்கிறேன்னு விரட்டி வருகிறது 


வெகுளி ஆனதும் துரத்த = கோபம். பிறரின் கோபம் (கணவன், மனைவி, உயர் அதிகாரி ) இவர்களின் கோபம். சில சமயம் நம் கோபமே நம்மை துரத்தும்.


மிடியும் துரத்த = மிடி என்றால் ஏழ்மை, தரித்திரம். பணம் இல்லை என்றால் கடன் காரன் துரத்துவான்.

நரை திரையும் துரத்த = வயோதிகம் நம் பின்னே வந்து கொண்டே இருக்கிறது. நாமும் அதன் கையில் அகப்படாமல் ஓடி கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் வரும். காதோரம் நரை முடி எட்டிப் பார்க்கும். பல் விழும். கண்ணில் திரை விழும்...முன்னே இருப்பது தெரியாது - கண்ணாடி இல்லாமல். 

 
மிகு வேதனைகளும் துரத்தப் = வேதனைகள் எப்படா இவனை பிடிக்கலாம் என்று துரத்தும். 


பகையும் துரத்த = பகைவர்கள், நம்மோடு போட்டி போடுபவர்கள் 


வஞ்சனையும் துரத்தப் = நாம் பிறருக்கு செய்த வஞ்சனை (பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா தாமே விளையும்), பிறர் நமக்கு செய்த வஞ்சனைகள் 


பசி என்பதும் துரத்தப் = பசி துரத்த 

பாவம் துரத்தப் = பாவம் துரத்த 


பதி மோகம் துரத்தப் = பதவி மோகம். 
 
பல காரியமும் துரத்த = அதை செய்யலியே இதை செய்யலியே என்று பற்பல காரியங்களும் துரத்த. ஒவ்வொரு காரியமும் என்னை கவனி என்னை கவனி என்று நம்மை விரட்டுகின்றன 
 

நகையும் துரத்த = கை கொட்டி மற்றவர்கள் சிரிப்பார்களே என்று பயந்து நாம் ஓடுகிறோம்..

ஊழ் வினையும் துரத்த = முன்பு செய்த வினை 

என் நாளும் துரத்த = விடாமல் துரத்த 
 
வெகுவாய் நா வறண்டு ஓடிக் = நாக்கு வறண்டு 

கால் தளர்ந்திடும் என்னை  = கால் தளர்ந்திடும் என்னை 

நமனும் துரத்துவானோ? = எமனும் துரத்துவானோ ?

அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! = எல்லா உலகங்களுக்கும் ஆதாரமான தெய்வமே 
 
ஆதி கடவூரின் வாழ்வே! = திருக் கடையூரின் வாழ்வே 
  
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! = அமுதீசர் பாகம் அகலாதவளே  
     
அருள் வாமி! அபிராமியே! = அபிராமியே அருள்வாயே 
 


5 comments:

  1. என்ன ஒரு பட்டியல்! அப்பா!

    ReplyDelete
  2. இத்தைனத் துன்பமில்லா பெருவாழ்வு வாழ அபிராமியான ஆதிபராசக்தியின் பதம் எந்நாளும் பணிந்திடுக

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete
  4. Can you please send pdf for printing

    ReplyDelete