இராமாயணம் - இராமனா ? பரதனா ? யார் தியாகம் பெரியது ?
இராமனை காண பரதன் கங்கை கரை வருகிறான். முதலில் அவனை சரியாகப் புரிந்து கொள்ளாத குகன் அவன் மேல் போர் தொடுக்க முனைகிறான். பின், பரதனை நன்கு அறிந்து கொண்ட பின்,
தாயின் உரை கேட்டு தந்தை கொடுத்த இந்த உலகத்தை தீயது என்று நினைத்து நீ வந்து இருக்கிறாய், ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் உன் புகழுக்கு இணை ஆவார்களா
என்று சொல்கிறான் குகன்.
அது எப்படி ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் பரதனுக்கு இணை ஆக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் ? அது கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்டது போல இல்ல ?
இல்லை.
அதை புரிந்துகொள்ள ஒரு கதை சொல்லுகிறேன்...
ஒரு முறை ஒரு பாதிரியார் ஒரு பள்ளி கூடத்திற்கு சென்று இருந்தார்.
அங்கிருந்த மாணவர்களிடம் அவர் கேட்டார்...
பாதிரியார்: குழந்தைகளே உங்களிடம் இரண்டு சைக்கிள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?
பிள்ளைகள்: ஓ எஸ் தருவோம் பாதர் ....
பா: நல்லது.உங்களிடம் இரண்டு நல்ல ஜோடி ஷூ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா?
பிள்ளைகள்: ஓ எஸ் ...தருவோம் பாதர்....
பா: நல்லது, உங்களிடம் இரண்டு பென்சில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?
பி: மாட்டோம், தர மாட்டோம்
பாதிரியார் திகைத்து போனார். ஏன் குழந்தைகளே சைக்கிள், ஷூ எல்லாம் தருவேன் என்றீர்கள், ஆனால் பென்சில் மட்டும் தர மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்க்கு பிள்ளைகள் சொன்னார்கள் ...எங்களிடம் பென்சில் இருக்கிறது...சைக்கிள், ஷூ எல்லாம் இல்லையே ...என்று...
இல்லாததை கொடுக்க முடியாது. இருப்பதை கொடுப்பது கடினம்.
தசரதன், இராமனுக்கு அரசை தருகிறேன் என்று சொன்னான்..தந்து விடவில்லை. இராமனுக்கு முடி சூட்டு விழா நடக்க வில்லை.
பரதனுக்கு அரசை தந்து விட்டான். அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.
இல்லாத அரசை தந்த இராமனை விட கையில் இருந்த அரசை துறந்த பரதன் ...ஆயிரம் இராமனை விட உயர்ந்தவன் என்பது குகனின் எண்ணமாக இருந்து இருக்கலாம்.
பாடல்
'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
"தீவினை" என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!
பொருள்
தாய் உரைகொண்டு = தாய் சொன்ன சொல்லை கேட்டு
தாதை உதவிய = தந்தையாம் தசரதன் கொடுத்து உதவிய
தரணிதன்னை,= இந்த உலகத்தை
"தீவினை" என்ன நீத்து = தீயது என்று நீக்கி
சிந்தனை, முகத்தில் தேக்கி, = சிந்தனை முகத்தில் கொண்டு
போயினை என்றபோழ்து = நீ வந்திருக்கிறாய் என்ற பொழுது
புகழினோய்! = புகழுடையவனே
தன்மை கண்டால் = உன்னுடைய தன்மையை கண்டால்
ஆயிரம் இராமர் = ஆயிரம் இராமர்
நின் கேழ் ஆவரோ = உனக்கு இணை ஆவார்களா
தெரியின் அம்மா! = தெரியவில்லையே
தகுதி இல்லாத பதவிக்கு ஆசைப் படக்கூடாது...அப்படியே தெரியாமல் அந்தப் பதவி கிடைத்து விட்டால் கூட , வைத்துக் கொள்ளக் கூடாது ...உரியவரிடம் சேர்பித்து விட வேண்டும் ....
கிடைத்த வரை ஆதாயம் என்று தனக்கு தகுதி இல்லாத பதவியில் இருக்கக் கூடாது.
இராமயணத்தை ஒழுங்காக பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தால், இள நெஞ்சங்களில் இது போன்ற உயர்ந்த எண்ணங்கள் விதைக்கப் படும்....இந்த தேசம் மிகச் சிறந்து விளங்கும்...
கையில் கிடைத்த பொக்கிஷங்களை எல்லாம் தூர எரிந்து விட்டு ஏழ்மையில் உழல்கிறோம் .....
WOW!Great explanation with an amazing story.Thanks.
ReplyDeleteஇந்தக் கதையைப் படித்து, வாய் விட்டுச் சிரித்தேன். பாடலுக்குப் பொருத்தமான கதை! மிக்க நன்றி.
ReplyDelete"இராமயணத்தை ஒழுங்காக பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தால், இள நெஞ்சங்களில் இது போன்ற உயர்ந்த எண்ணங்கள் விதைக்கப் படும்....இந்த தேசம் மிகச் சிறந்து விளங்கும்...
ReplyDeleteகையில் கிடைத்த பொக்கிஷங்களை எல்லாம் தூர எரிந்து விட்டு ஏழ்மையில் உழல்கிறோம் ....." --- Well said sir..