Pages

Tuesday, February 26, 2013

அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்

காதலனின் பிரிவால் காதலி வாடி இருக்கிறாள். அப்போது அவளுடைய தோழி வந்து கேட்க்கிறாள்...

தோழி: என்னடி, ஒரு மாதிரி இருக்க, உடம்பு கிடம்பு சரி இல்லையா ?

அவள்: அதெல்லாம் ஒண்ணும்  இல்லை, இந்த காலத்துல யாரை நம்பறது யாரை நம்பாம இருக்கிறது அப்படின்னு தெரியல..ஒரே குழப்பமா இருக்கு ...

தோழி: என்னடி ரொம்ப பொடி  வச்சு பேசுற...இப்ப என்ன ஆச்சு ? யாரு என்ன சொன்னாங்க ...யார நம்ப முடியல ?

அவள்: வேற யாரும் இல்லடி, என் மனசைத்தான்...

தோழி: என்னது உன் மனசை நீ நம்ப முடியலையா ? சரிதான் பித்து முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் ...விளக்கமா சொல்லுடி...

அவள்: அவன் ஊருக்கு போனானா ?

தோழி: யாரு ? ஓ ... அவனா ...சரி சரி...

அவள்: அவன் பின்னாடியே என் மனமும் போயிருச்சு....

தோழி: போயி?

அவள்: அவன் எப்படி இருக்கான் சாப்பிட்டானா, தூங்கினானா, நல்லா இருக்கானான்னு அவனையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தது...

தோழி: சரி..அப்புறம் ?

அவள்: அப்புறம் என்ன அப்புறம்...திருப்பி என் கிட்ட வரவே இல்லை...

தோழி: ஐயோடா...பாவம்...

அவள்: போடி, நீ ஒருத்தி, காலம் நேரம் தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு...ஒரு வேளை இப்படி இருக்குமோ ?

தோழி: எப்படி ?

அவள்: என் நெஞ்சம் திருப்பி வந்திருக்கும்...அவன பார்க்காமால் எனக்குத் தான் சோறு தண்ணி இறங்கலியே ...தூக்கமும் போச்சுல...நான் மெலிஞ்சு, சோர்ந்து இருக்கிறத பார்த்து இது வேற யாரோன்னு நினைச்சு என்னை கண்டு பிடிக்க முடியாமல் என் நெஞ்சம் தேடிக் கொண்டிருக்குமோ ?

தோழி: சரிதான்...ரொம்ப தான் முத்தி போச்சு ... கால காலத்துல ஆக வேண்டியதை பண்ணிற வேண்டியதுதான்...இப்படி கூடவா காதலிப்பாங்க உலகத்துல...

காலங்களை கடந்து உங்கள் கதவை தட்டும் அகநானூற்றுப் பாடல்



குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை 
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் 
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ  
அருளா னாதலின் அழிந்திவண் வந்து 
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி 
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. 


பொருள் 

குறுநிலைக் = சின்ன ஊரில்

குரவின் = குரா என்ற மரத்தின்

சிறுநனை = சிறிய அரும்புகள்

நறுவீ வண்டுதரு நாற்றம் = வண்டுகள் மொய்க்கும் மலரில் இருந்து வீசும் நறுமணம்  

வளிகலந்து ஈய  = காற்றில் மிதந்து வர

கண்களி பெறூஉங் = கண்கள் களிப்படையும்

கவின்பெறு காலை = கவித்துவமான இந்த காலை நேரத்தில்

எல்வளை = என்னுடைய வளையல்கள்

ஞெகிழ்த்தோர்க் = நெகிழ செய்தவர்க்கு (எப்படி ? ஒரு வேளை அவன் அதை கழட்டி விளையாடி கொண்டிருக்கலாம், அல்லது காதல் உணர்ச்சி மேலீட்டால் அவள் உணவு மறந்து மெலிந்து வளையல் நெகிழ்ந்து இருக்கலாம், அல்லது அவளுடைய நினைவாக அவன் அவளிடம் அதை வாங்கிச் சென்று இருக்கலாம் ... அனுபவித்தவர்களுக்குத் தெரியும் )


கல்லல் உறீஇயர் = எனக்கு துன்பம் தந்தவர் தான் என்றாலும் (என்ன வெல்லாம் துன்பம்...கன்னத்தை கிள்ளாமல் , விரல் நெறிய கை பற்றாமல், கண்ணீர் வர கண்ணில் கண் மை போட்டு விடாமல்...எவ்வளவு துன்பம் தருகிறார் )


சென்ற நெஞ்சு - அவர் பின் சென்ற என் நெஞ்சு

செய்வினைக் குசாவாய் = அவர் வேலை செய்யும் போது அவருக்கு உதவியாய் இருந்து

ஒருங்குவரல் = அவன் கூடவே இருந்து, அவனோடு ஒண்ணா வருவதருக்கு 

நசையொடு = நசை என்றால் அன்பு செய்தல்.

வருந்துங் கொல்லோ = அன்பும் செய்கிறது, வருத்தமும் படுகிறது
 
அருளா னாதலின் = அவன் எனக்கு அருள் செய்ய மாட்டான். அருளான் + ஆதலின்

அழிந்திவண் வந்து = அழிந்த, துன்பப்பட்ட என் நெஞ்சம் என்னிடம் வந்து

தொன்னலன் = தொன்மையான நலம் (பழைய அழகு )

இழந்தவென் = இழந்த என்

பொன்னிற நோக்கி = பசலை படர்ந்த என் மேனியின் நிறத்தை நோக்கி

ஏதி லாட்டி இவளெனப் = யார் இவள் என்று எண்ணி
 
போயின்று கொல்லோ = திரும்பி போய் விட்டதோ

நோய்தலை மணந்தே. = துன்பப்பட்டு, வருத்தப்பட்டு (என்னை காணாமல்)

அவளுடைய மனதிற்கே அவளை அடையாளம் தெரியவில்லை. அப்படி மாறிப் போனாள்.

கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல், பத்திரமாய் நீந்தி கரை சேர்ந்து வந்த இந்த பாடல்...இன்றும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மணம் வீசும் காதலை பேசிக் கொண்டே இருக்கிறது...இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளும் இது மனம் - மணம்  பரப்பும் ... 

இன்னும் கொஞ்சம் கூட விரிவாக எழுதலாம் ... கவிதையை கட்டுரை ஆக்குவது  பாவம் என்று கருதி விடுகிறேன்...

கவிதையை நேரடியாக உணர்வதுதான் சிறந்தது....சில பல வார்த்தைகள் புரியாமல் போகலாம்...

எல்லாம் புரிய அது என்ன கட்டுரையா ? கவிதை கண்ணா மூச்சி ஆடும்....கண்ணில் தின் பண்டத்தை காட்டி விட்டு தர மாடேன் என்று பின்னால் மறைத்து ஓடும் காதலி போல...ஓடிப் பிடித்து, அவள் கையில் இருந்து பிடுங்கி விடலாம் தான்....அதுவா சுகம்....? ... அவளிடம் கெஞ்சி அவள் கொஞ்சம் பிகு பண்ணி, "கண்ணை மூடு ..அப்பத்தான் தருவேன் " என்று  அவள் அன்புக் கட்டளை போட்டு ...பின் ஒரு துண்டு உங்கள் வாயில் போடும் சுகம், சுகமா ?

கவிதை அப்படித்தான்...கண்ணில் தெரியும், கைக்கு எட்டாமல் போக்கு காட்டும்...விட்டுப் பிடியுங்கள்... 

வார்த்தை வார்த்தையாய் கவிதையை பிரிக்காதீர்கள் 

ரோஜாவில் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாய் பிச்சு பிச்சு தேடித் பார்க்க முடியாது....

கடைசியில் காம்பு தான் மிஞ்சும்...அதுவா அழகு ?

மீண்டும் ஒரு முறை கவிதையை படியுங்கள்....உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை மலர்ந்தால் உங்கள் கவிதை புரிந்து விட்டது என்று அர்த்தம் ....





1 comment:

  1. ஒரு புன்னகை என்ன, இன்னும் முறுவலை நிறுத்த முடியவில்லை! பாடல் அருமை, உன் முன்னுரை அதைவிட அருமை, உன் பின்னுரை அருமையோ அருமை!

    ReplyDelete