குறுந்தொகை - நின் நெஞ்சு நேர்பவளே
அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். காதலித்த போதும், திருமணம் ஆன பின்னும் அவளின் அன்பு மாறவில்லை. நாள் ஆக நாள் ஆக அவனுக்குள் ஏதேதோ தேடல்கள். அவனுக்கு அவள் மேல் இருந்த அன்பு குறைந்தது என்று சொல்ல முடியாது ஆனால் ஏதோ ஒரு திரை விழுந்த மாதிரி ஒரு வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது.
அவளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு வேறு யாரையாவது பிடித்திருக்கிறதோ ? தன்னை மணந்து கொண்டதால் அவனுக்கு வாழ்வில் அவன் தேடும் இன்பம் கிடைக்கவில்லையோ என்று அவள் வருந்துகிறாள். அவன் வேறு யாரையாவது தேடுகிறானா ?
நினைக்க நினைக்க அவன் மேல் அன்பு பெருகுகிறதே தவிர குறையவில்லை.
இன்னொரு பிறவி என்று வந்தால் அவன் மனம் முழுவதும் நானே நிறைந்திருக்க வேண்டும் மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள்.
பாடல்
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.
பொருள்:
அணிற்பல் லன்ன = அணிலின் பல்லை போன்ற. (சிறிய, கூரிய பற்கள்)
கொங்குமுதிர் முண்டகத்து = கொங்கு என்றால் பூவில் உண்டாகும் மகரந்தம் அல்லது தேன். மகரந்தம் முற்றி முதிர்ந்த முள்ளிச் செடியில்
மணிக்கே ழன்ன = நீல மணிகளை போன்ற
மாநீர்ச் = பெரிய நீர், கடல்
சேர்ப்ப = சேர்ந்தவனே, தலைவனே
இம்மை மாறி = இந்த பிறவி போய்
மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும்
நீயா கியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும்
யானா கியர் = யான் + ஆகியர் = நானே
நின் னெஞ்சுநேர் பவளே.= நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே
நீயே என் கணவனாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நிறுத்தி இருக்கலாம். அவன் கணவன் என்றால் இவள் மனைவி தானே.
அவன் மனதில் இருப்பவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவன் மனதுக்கு இனியவளாக, மனதுக்கு பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
இந்தப் பிறவியில் அப்படி இல்லை, அது முடியவும் முடியாது என்று உணர்ந்து அடுத்த பிறவியிலாவது அவன் நெஞ்சு நேர்பவளாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
நேர்பவளே என்ற சொல் மிக இனிமையான சொல். நேர்தல் இயற்கையாக நிகழ்வது.
கணவன் மேல் பாசம் கொண்ட, அவன் அன்பை முழுமையாகப் பெற முடியாத, ஒரு இளம் பெண்ணின் மனக் கேவல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் காதில் சன்னமாக ஒலிக்கிறது...அவள் கன்னத்தில் உருண்டோடும் கண்ணீர் துளியின் ஈரத்தை நாம் உணரத் தருகிறது இந்தப் பாடல் ....
இதை எழுதிய திய கவி இதே பொருளில் எழுதினாரா, இல்லையா என்று தெரியாது. ஆனால், நீ எழுதியுள்ள பின்கதை அஅருமை. பாடலின் இனிமையைப் பன்மடங்கு கூட்டுகிறது.
ReplyDelete