இராமாயணம் - எனக்கு நீ செய்யத்தக்க கடன் எல்லாம்
ஒரு முறை ஒரு பெரிய பணக்காரன் ஒரு ஜென் துறவியிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றான்.
அந்த ஜென் துறவி "முதலில் நீ சாவாய் , அப்புறம் உன் மகன் சாவான், அப்புறம் உன் பேரன் சாவான்" என்று ஆசீர்வாதம் பண்ணினார்.
பணக்காரனுக்கு ரொம்ப கோவம்." என்ன குருவே இப்படி சொல்றீங்க ... ஆசீர்வாதம் வாங்க வந்தால் எல்லோரும் சாக வேண்டும் என்று சொல்கிறீர்களே " என்றான்.
அதற்கு அந்த ஜென் துறவி சொன்னார்..."யோசித்துப் பார், முதலில் உன் பேரன் இறந்து , அப்புறம் உன் மகன் இறந்து, அதற்குப் பின் நீ இறந்தால் எப்படி இருக்கும் என்று "
உலகிலேயே மிக மிக துக்ககரமான நிகழ்வு பிள்ளைகள் பெற்றோருக்கு முன் இறப்பது.
இந்திரஜித்து இறந்து விட்டான். இராவணன் களம் வந்து மகனின் சடலத்தை தேடுகிறான் . தேடி கண்டு பிடித்து அழுகிறான், புலம்புகிறான்...
அவன் பத்து தலையும் எப்படி அழுதது என்று கம்பன் பத்து பாட்டு எழுதி இருக்கிறான். இரசிகமணி டி கே சி சொல்லுவார், அடடா இராவணனுக்கு நூறு தலை இல்லையே, இருந்திருந்தால் இன்னுமொரு தொண்ணூறு பாடல் கிடைத்திருக்குமே என்று.
இராவணன் புலம்பல், நெஞ்சை உருக்கும் பாடல்கள். தரசதன் புலம்பினான், தரசதன் இறந்ததை கேட்ட இராமன் புலம்பினான், வாலி இறந்த பின் தாரை புலம்பினாள், மண்டோதரி புலம்பினாள் இராவணன் இறந்த பின்....எல்லாவற்றையும் விட சோகம் ததும்பும் பாடல்கள் இராவணன் புலம்பல்...எப்பேர்பட்ட வீரன்... அவன் புலம்புகிறான் ....மகன் இறப்பதற்கு தானே காரணம் என்ற எண்ணம் அவனை மேலும் வாட்டுகிறது....
பாடல்
சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'
பொருள்
சினத்தொடும் = கோபத்தோடும்
கொற்றம் முற்ற = வெற்றி, வீரம், வன்மை, அரசு என்ற பல பொருள் கொற்றம் என்ற சொல்லுக்கு. முழுமையாக வெற்றி பெற்று என்று கொள்ளலாம்.
இந்திரன் செல்வம் மேவ = இந்திரனின் செல்வமான தேவலோகத்தையும் வென்று
நினைத்தது முடித்து நின்றேன் = நினைத்தது எல்லாம் முடித்து நின்றேன். நினைத்ததை முடிப்பவன்.
நேரிழை ஒருத்தி = பெண் (சீதை) ஒருத்தியால்
நீரால் = தண்ணீரால்
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் = எனக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடன் எல்லாம்
ஏங்கி ஏங்கி = ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வதானேன்! = உனக்கு நான் செய்யும் படி ஆகி விட்டது
என்னின் யார் உலகத்து உள்ளார்?' = என்னை போல் யார் உலகத்தில் இருக்கிறார்கள் ?
மிக நல்ல பாடல். நன்றி.
ReplyDeleteWell dun
Delete