திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான். அதை விட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
அது தான் ஒழுக்கம்.
ஒழுக்கம் உயர்ந்தது. சிறந்தது. அது எவ்வளவு சிறந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அது உயிரை போன்றது. ஏன் என்றால் போனால் வராது.
சரி, ஒழுக்கம் உயிரை போன்றது என்று சொல்லி இருக்கலாமே , அது ஏன் உயிரினும் என்று உம்மை சேர்த்து சொல்லி இருக்கிறார் வள்ளுவர் ?
காரணம் இருக்கிறது.
உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும்.
அது என்ன விழுப்பம் ?
விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள்.
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே)
ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும் ?
உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்க்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.
உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால் ? வள்ளுவர் விடை தருகிறார் ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்..
திருவெம்பாவை பாடல்
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )
Good
ReplyDeleteOkay 🆗
Delete