Pages

Saturday, May 11, 2013

பிரபந்தம் - விலா நோக சிரித்தேன்


பிரபந்தம் - விலா நோக சிரித்தேன் 


நிறைய பேர் கோவிலுக்குப் போவார்கள். சாமி கும்பிடுவார்கள். உண்டியலில் காணிக்கை போடுவார்கள். பக்தி புத்தகம் எல்லாம் படிப்பார்கள்.

எல்லாம் வெறும் கடமை மாதிரி இருக்கும்.

செய்யாவிட்டால் பாவம் என்று நினைத்து செய்பவர்கள் இருக்கிறார்கள்.

செய்தால் நிறைய பலன் கிடைக்கும் என்று ஆசைப் பட்டு செய்வார்கள்.

செய்யாவிட்டால் எங்கே மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்று மரியாதை வேண்டி செய்வார்கள்.

எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்து விட்டு போவோம்....எதுக்கு வம்பு என்று செய்பவர்களும் உண்டு.

இறைவனை அறிந்தவர்கள் எத்தனை பேர் ?

இப்படி இறைவனை அறியாமல் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல் காரியம் செய்தேன்....என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது...சாதாரண சிரிப்பு இல்லை...விலா நோக சிரிப்பு வருகிறது என்கிறார் தொண்டரடிப்பொடி.....

பாடல்

உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவறச் சிரித்திட் டேனே. 

கொஞ்சம் சீர் பிரிப்போம்

உள்ளத்தே உறையும் (திரு)மாலை 
உள்ளுவார் உணர்வு ஒன்றுமில்லா 
கள்ளத்தேன் நானும் தொண்டனாய் 
தொண்டுக்கே கோலம் பூண்டேன் 
உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் 
உடனிருந்து அறிதி என்று 
வெள்கிப் போனேன் என்னுள்ளே நான் 
விலவற சிரித்திட்டேனே 

பொருள்






உள்ளத்தே உறையும் (திரு)மாலை = அவன் உள்ளத்தினுள்ளே இருக்கிறான். அதை விட்டுவிட்டு கோவில் கோவிலாக அலைகிறேன்.

உள்ளுவார் = நினைப்பார்

உணர்வு ஒன்றுமில்லா = இறை உணர்வு ஒன்றுமில்லாமல், ஏதோ கடனுக்கு

கள்ளத்தேன் = நானும் பக்தன் போல கள்ளத்தனமாக

 நானும் தொண்டனாய்  = நானும் தொண்டன் போல

தொண்டுக்கே கோலம் பூண்டேன் = தொண்டு செய்வதாக வேடம் போட்டேன்

உள்ளுவார் = நினைப்பார்

 உள்ளத்தில் எல்லாம் = உள்ளத்தில் எல்லாம்

உடனிருந்து அறிதி என்று = அவர்கள் கூடவே இருந்து அறிதி என்று

வெள்கிப் போனேன் என்னுள்ளே நான் = வெட்கப்பட்டு போனேன்  நான்

விலவற சிரித்திட்டேனே =விலா நோக சிரித்தேன்

மேலோட்டமாய் பார்த்தால் சட்டென்று பிடிபடாத சில அர்த்தங்கள்.

ஒன்று, இறை உணர்வு வேண்டும். பக்தி என்பது கோவிலுக்குப் போவோதோ, பாசுரங்களை மனப்பாடம் செய்வதோ அல்ல.

இரண்டு, தொண்டு மிக முக்கியம். பலன் கருதா உதவி தொண்டு என்று கொள்ளலாம். யாரால் நமக்கு திருப்பி செய்ய முடியாதோ, அவர்களுக்கு செய்வது  அது தொண்டு.


வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து என்பது வள்ளுவம்

மூன்றாவது, இறைவனை அறிய வேண்டும் என்றால் அவனை அறிந்தவர்களோடு கூட இருக்க வேண்டும்.  அப்படி, அவர்களோடு இருக்கும் போது , இறை சிந்தனை மீண்டும் மீண்டும் வரும்.

தொண்டரடி பொடி ஆழ்வார்க்கு இது நிலை என்றால், நம் நிலை ?





1 comment:

  1. தன்னைத் தானே நொந்து, வெட்கப்பட்டுக் கொள்கிறார். இனிய பாடல்.

    ReplyDelete