Pages

Thursday, May 16, 2013

இராமாயணம் - அருளின் ஆழியான்



இராமாயணம் - அருளின் ஆழியான் 


இராமனின் கொடைத்திறம், அவன் வில்லாற்றல் பற்றி கூறிய வாலி, அடுத்து அவனின் சகோதர பாசத்தை பற்றி கூறுகிறான்

இராமனுக்கு அவன் தம்பிகள் என்றால் உயிர். அவர்களை தவிர இன்னொரு உயிர் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் மேல் பாசமாய் இருந்தான். அப்படிபட்டவன், நானும் என் தம்பியும் சண்டை போடும்போது முடிந்தால் எங்கள் சண்டையை விலக்கி நாங்கள் ஒன்றாக வாழ வழி செய்வானே அல்லாமல் எங்களுக்கு இடையே உள்ள பகையை தனக்கு சாதகமாக கொண்டு, என் மேல் அம்பு தொடுக்க மாட்டான் என்று உறுதியாகச் சொல்கிறான்.

அது மட்டும் அல்ல, இராமன் கருணை கடல். நான் தவறே செய்திருந்தாலும் என்னை மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவன். அவனை போயா நீ மறைந்து இருந்து அம்பு விட்டு என்னை கொல்வான் என்கிறாய் என்று தாரையிடம் சொல்கிறான்.....

இராமனின் வில்லாற்றல், அவன் சகோதர பாசம், அவன் வள்ளல் தன்மை, அவன் கருணை உள்ளை என்று இராமன் மேல் ஒரு ஆழ்வார் கொண்ட பக்தியும், அன்பும் போல வாலி கொண்டிருக்கிறான்....

பாடல்


தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்?


பொருள்






தம்பியர் அல்லது = தம்பிகளை தவிர

 தனக்கு வேறு உயிர் = தனக்கு வேறு ஒரு உயிர்

இம்பரின் இலது = இந்த உலகில்  இல்லை

என எண்ணி ஏய்ந்தவன் = என் எண்ணி வாழ்கிறவன்

எம்பியும் = என் தம்பியும்

யானும் = நானும்

உற்று எதிர்ந்த போரினில் = ஒருவரோடு ஒருவர் எதிர்த்து சண்டை இடும் போது

அம்பு இடை தொடுக்குமோ = அம்பை இடையில் விடுவானோ ?

அருளின் ஆழியான் = கருணை கடல் (ஆழி = கடல் )

அருள் என்றால் என்ன ? அருள் என்பது கொல்லாமை என்கிறார் வள்ளுவர்

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.


விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு என்பார் பட்டர்

அன்பு தொடக்கம், அருள் முடிவு. நம்மை சார்ந்தோரிடம் நாம் செலுத்துவது அன்பு. எல்லா உயிர்களிடத்தும் நாம் செலுத்துவது அருள்.

அருள் என்பது உயிர்களை காப்பாற்றுவது. அவற்றை வாழச் செய்வது. அந்த அருட்கடல்  ஒரு காரணமும் இன்றி என்னை கொல்வானா என்று கூறிவிட்டு போருக்குச் செல்கிறான்




1 comment:

  1. அருமையான, மனதை உருக்கும் பாடல்கள்... அதே சமயம் சஸ்பென்சும் கூடுகிறது வாலி வதைக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார் கம்பர் என்று.

    ReplyDelete