இராமாயணம் - தன்னில் வேறு இலான்
இராமனின் குணத்தை மட்டும் அல்ல, அவன் வீரத்தையும் புகழ்கிறான் வாலி. அனைத்து உலகங்கள் எதிர்த்து வந்தாலும், அவனுடைய வில் ஒன்று போதும் அதை சமாளிக்க. அவனுக்கு ஒரு துணை வேண்டாம். அவ்வளவு பெரிய வீரன். அவன் போய் இந்த கீழான குரங்கோடு நட்பு கொள்வானா ? மாட்டான். என்று தாரையிடம் சொல்கிறான் வாலி.
இராமன் மேல் அளவு கடந்த மதிப்பு.
அவன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை.
போன பாடலில் அவனின் சகோதர பாசத்தை பற்றி சொன்னான்.
அவனின் வள்ளல் தன்மை பற்றி சொன்னனான். தம்பிக்கு அரசை எவ்வளவு மகிழ்ச்சியோடு கொடுத்தான் என்று சொன்னான்.
கீழ் வரும் பாடலில் அவனுடைய வீரத்தை புகழ்கிறான்.
பாடல்
நின்று பேர் உலகு
எலாம் நெருக்கி நேரினும்,
வென்றி வெஞ் சிலை
அலால், பிறிது வேண்டுமோ?
தன் துணை ஒருவரும்,
தன்னில் வேறு இலான்,
புன் தொழில் குரங்கொடு
புணரும் நட்பனோ?
பொருள்
நின்று பேர் உலகு எலாம் = இந்த பெரிய உலகம் எல்லாம்
நெருக்கி நேரினும் = ஒன்றாக எதிர்த்து வந்தாலும்
வென்றி = வெற்றி பெற
வெஞ் சிலை = ஆற்றல் மிக்க அவனது வில்லை
அலால் = தவிர
பிறிது வேண்டுமோ? = வேறு ஏதாவது வேண்டுமோ ?
தன் துணை ஒருவரும் = தனக்கு துணையாக ஒருவரும்
தன்னில் வேறு இலான் = தன்னை தவிர வேறு யாரையும் வேண்டாதவன். தனக்கு உவமை இல்லாதான் தாள் தேர்ந்தார்க்கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது என்பார் வள்ளுவர்.
புன் தொழில் = கீழான தொழில் புரியும்
குரங்கொடு = குரங்குகளோடு. இப்பவும், தன்னையும் தன் குலத்தோரையும் குரங்கு என்றே கருதுகிறான் வாலி.
புணரும் நட்பனோ? = நட்பு கொள்வானா ? (மாட்டான் என்பது கருத்து)
No comments:
Post a Comment