Pages

Tuesday, May 14, 2013

இராமாயணம் - உவகையால் அளித்த ஐயன்


இராமாயணம் - உவகையால் அளித்த ஐயன் 


போருக்கு போகாதே, சுக்ரீவனுக்கு இராமன்  துணையாக வந்திருக்கிறான் என்று சொல்லக் கேட்ட வாலி  இராமனின் குணங்களை தாரைக்கு  எடுத்துரைக்கிறான்.....

தசரதன் நாட்டை பரதனுக்கு  சொன்னான். இராமன் கொடுத்தான்.

கொடுக்கும் போது மகிழ்ச்சியோடு கொடுத்தானா ? அல்லது தந்தை சொல் மீறக் கூடாது என்ற  கடமை உணர்வினால் சந்தோஷம் இல்லாவிட்டாலும் கொடுத்தானா ?

வாலி சொல்கிறான் - ஆற்ற அரும் உவகையால் - சொல்ல முடியாத சந்தோஷத்தோடு கொடுத்தானாம்.

வாலி அதை நேரில் பார்க்க வில்லை...இராமன் அப்படிதான் கொடுத்திருப்பான் என்று நம்புகிறான்.

மேலும், இராமனை கானகம் அனுப்பிய கைகேயியை கைகேயியை  வாலிக்கு பிடிக்கவில்லை. அவள் பெயரை கூட அவன் சொல்ல விருமபவில்லை. ஈன்றவள் மாற்றவள் என்கிறான்.

இராமன் மேல் அவ்வளவு அன்பு, மரியாதை வாலிக்கு.

இராமன் தவறே   செய்யமாட்டான் என்று  உறுதியாக நம்புகிறான்.

பாடல்


ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்
மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை; இன்னன புகறல்பாலையோ?'


பொருள்






ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி = தசரதன் ஏற்ற பெரிய உலகை எல்லாம் அடைந்து. இராமன் பெற்று விட்டதாகவே வாலி சொல்கிறான். இராமன் மூத்த மகன். இராஜ்ஜியம் அவனுடையது. தசரதன் தந்தாலும் தராவிட்டாலும் அது இராமன்  சொத்து என்று வாலி நினைக்கிறான்.

ஈன்றவள் = கோசலை

மாற்றவள் = மாற்றாந்தாய் - கைகேயி

ஏவ = அதிகாரமாக சொல்ல. ஏவுதல் என்றால் வேலை ஆட்களுக்கு உத்தரவு  இடுவது

மற்று = மற்றும்

 அவள்தன் மைந்தனுக்கு = அவளுடைய மைந்தனுக்கு (பரதனுக்கு)

ஆற்ற அரும் உவகையால் = சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு


 அளித்த ஐயனைப் = கொடுத்த ஐயனை

போற்றலை = புகழாமல்

இன்னன புகறல்பாலையோ? = இப்படி எல்லாமா பேசுவது ?

எவ்வளவு நம்பிக்கை ? எவ்வளவு வாஞ்சை ? இராமனுக்கு கெடுதல் செய்தவர்கள் மேல் கோபம் ...அந்த வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றான்.

ஏன்? ஏன்? ஏன் ?





2 comments:

  1. Let me guess, மறைந்து தாக்காமல், நேரிடை போரானால், வரத்தின் மகிமையால், வாலிக்கு இராமன் எஃபெக்ட் ஏற்பட்டு, மனமாற்றம் ஏற்பட்டுவிட்டால், சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கு கெடுமே, அதனாலா?

    ReplyDelete
  2. மேலே anonymous எழுதியது ஒரு சுவையான கற்பனை. ஆனால், சுக்ரீவனுக்கு வேண்டியது என்ன? தனது அண்ணன் சாக வேண்டும் என்பதா?!

    ReplyDelete