Pages

Monday, May 27, 2013

இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை


இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை 


இரணியன் வதை படலம் படிக்கும் போது , எதை  சொல்வது, எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனையும் அருமையான பாடல்கள். கம்பனின் கவித்திறம் முழு  வீச்சில் வெளிப்பட்டு நிற்பது இங்குதான் என்று சொல்லத்  தோன்றுகிறது.

வேகமாக முன் சென்று இந்த பாடலை தருகிறேன்.

இரணியன் கேட்கிறான், "நீ சொன்ன அந்த நாராயணா என்ற நாமத்தில் அப்படி என்ன மகிமை " என்று.

பிரகலாதன் சொல்லுகிறான்...அவன் சொல்லும் அத்தனை பாடல்களும் அருமையிலும் அருமை ... எல்லாவற்றையும் எழுத எனக்கு ஆசைதான் .... படிக்க உங்களுக்கு ?

பிரகலாதன் சொல்லுகிறான்...நான் உனக்கு உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. நாராயணா என்ற நாமம் வேதங்களுக்கும் வேள்விகளுக்கும் எல்லை போன்றது, எல்லோரும் கற்கும் பால் என்ற கல்விக்கு பிரை போன்றது என்கிறான்.

கல்வி என்பது பால் போன்றது. கெட்டிப் படாதது. சலனம் உள்ளது. கல்வியோடு இறை உணர்வு சேரும்போது அந்த கல்வி உரை விடப்பட்ட பால் போல கட்டிப் படுகிறது. சலனம் போய் விடுகிறது.

கெட்டிப்பட்ட அறிவை சித்தம் என்பார்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

பாடல்

' "உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,- 
விரை உள அலங்கலாய் ! - வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்:

பொருள் 



உரை உளது உணர்த்துவது = உனக்கு உணரத்த வேண்டிய உரை உள்ளது

உணர்ந்து கோடியேல் = உணர்ந்து கொள்வாயானால்

விரை உள அலங்கலாய்  = மணம் கமழும் மாலை அணிந்தவனே 

வேத வேள்வியின் கரை உளது = வேதங்கள், வேள்வியின் எல்லை அது (கரை = முடிவு, காவல்)

யாவரும் கற்கும் கல்வியின் = யாவரும் கற்கும் கல்வியின்

பிரை உளது = பாலில் உரை விடும் பிரை போன்றது அது

என்பது மைந்தன் பேசினான்: = என்று பிரகலாதன் பேசினான்


1 comment:

  1. சுவாரசியமான விஷயம். "கல்வியில் இறை உணர்வு சேரா விட்டால் அது உறுதி ஆகாது". யோசிக்க வேண்டிய செய்தி. ஏன் அப்படிச் சொல்கிறாரோ தெரியவில்லை.

    ஆனால் அருமையான பாடல்.

    ReplyDelete