Pages

Monday, June 17, 2013

பிரகலாதன் - நாயகன் நாமம் விடுகிற்கின்றிலன்

பிரகலாதன் - நாயகன் நாமம் விடுகிற்கின்றிலன்


பிரகலாதனை, இரணியனின் வீரர்கள் பெரிய கல்லில் கட்டி, கடலின் நடுவில் காற்றை விட வேகமாக சென்று தூக்கிப் போட்டார்கள்.

என்ன ஆயிற்று ?

அந்த நிலையிலும் பிரகலாதன் நடுநிலைமையான அந்த நாயகனின் நாமத்தை  விடவில்லை. அதனால், அந்த கடல் அவனுக்கு சின்ன மடு போல ஆனது. அவனைக் கட்டிய அந்த கல் மிதக்கும் குடுவையானது. அந்த குடுவையே அவன் மிதந்து கரை சேரும் படகானது.

பாடல்

'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

பொருள் 



நடு ஒக்கும் = இறைவன் நடு நிலையானவன். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில

கல்லார்க்கும் கற்றவர்க்கும், எல்லோர்க்கும் நடுவாய் நிற்கும் நாயகன்.  

http://interestingtamilpoems.blogspot.in/2012/04/blog-post_9220.html

தனி நாயகன் நாமம் = அவன் யாரோடும் ஒப்புமை படுத்தி கூற முடியாத தனி நாயகன்.

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது.

என்பது வள்ளுவம். 

விடுகிற்கின்றிலன் = விட்டானில்லை. அந்த துன்ப நேரத்திலும், இறைவன் நாமத்தை அவன் மறக்கவில்லை

ஆகலின் = ஆதலால்

வேலை = கடல்

மடு ஒத்து = சின்ன மடு போல ஆனது (மடு = குளம், குட்டை போன்ற சின்ன நீர் நிலை)


அங்கு அதின் வங்கமும் அன்றாய் = வங்கம் என்றால் படகு.  அங்கு படகு ஆனது.

குடுவைத் தன்மையது ஆயது, குன்றம் = குடுவை போல ஆனது அந்த குன்றம்

இறை நாமம் கல்லை தக்கை ஆக்கியது.

ஒரு முறை திரு நாவுக்கரசரை கல்லை கட்டி கடலில் போட்டார்கள்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.



கல்லினை பூட்டி கடலில் போட்டாலும், நல்ல துணையாவது நமச்சிவாயவே என்று நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களைப் பாடினார். அத்தனையும் தேன்  போன்ற தேவாரப் பாடல்கள். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.  அவரைக் கட்டிய அந்த கல் தெப்பமானது. அதில் மிதந்து கரை ஏறி வந்தார். அவர் அப்படி வந்த இடத்திற்கு கரை ஏற விட்ட குப்பம் என்று பெயர் . அது இன்றும் கடலூருக்குப் பக்கத்தில் இருக்கிறது

கல் மிதக்குமா ? அறிவியல் படி அது சாத்தியமில்லையே என்று நினைக்கலாம்.

பாடலின் நோக்கம் அது அல்ல.

வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நம்பிக்கை தளராமல் இருங்கள் என்று நம்பிக்கை ஊட்ட வந்த பாடல்கள் இவை.

நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தி காட்டும்.

மாந்தர்க்கு உள்ளத்து அனையது உயர்வு என்றார் வள்ளுவர்.

மனதில் எவ்வளவு நம்பிக்கை கொள்கிறீர்களோ, அவ்வளவும்  உயர்வு தான்.

   
அந்த கடலில் பிரகலாதன் மிதந்தான். எப்படி மிதந்தான் தெரியுமா ? கம்பனைத் தவிர  அந்த மாதிரி ஒரு உதாரணத்தை யாராலும் சிந்திக்கக் கூட முடியாது. 

நாளை வரை சிந்தித்துப் பாருங்கள். 


No comments:

Post a Comment