Pages

Sunday, June 16, 2013

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பெண், வானவில் போன்றவள்.

மனைவியே சில சமயம் தாயாகவும்,மகளாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் பரிணமிக்கிறாள்.

உயிர் தரும் தாயாக, கொஞ்சும் நேரம் மனைவியாக, முரண்டு பிடிக்கும் நேரம் மகளாக, சோதனை நேரத்தில் தோள் கொடுக்கும் போது தோழியாக....அத்தனையுமாக இருக்கிறாள் அவள். 

நீங்கள் அவளை எப்படி பார்கிரீர்களோ, அவள் அப்படி இருக்கிறாள். 

அபிராமியை பார்க்கிறார் பட்டார்.

இந்த உலகை எல்லாம் படைத்த தாயாகத்  தெரிகிறாள்.

படைத்தால் மட்டும் போதுமா ? படைத்த வண்ணமே அவள் எல்லா உயிர்களையும் காக்கிறாள்.

பின் அவற்றை மறைத்து வைக்கிறாள். அவற்றை அழிக்கிறாள் என்றோ கொன்றாள் என்றோ சொல்லவில்லை. சில உயிர்களை மற்ற உயிர்களிடம் இருந்து  மறைத்து வைக்கிறாள். 

கறை கண்டனுக்கு - நஞ்சை உண்டதால் கருத்த கண்டத்தை உள்ள சிவனுக்கு மூத்தவளே.

அவனுக்கு இளையவளே.

பெரும்  செய்தவளே. உன்னை விடுத்து வேறு தெய்வங்களை ஏன் வணங்குவேன் ? 

பொருள் 



பூத்தவளே = பூ போன்று மலர்ந்தவளே. இந்த உலகை எல்லாம் படைத்தவளே


புவனம் பதினான்கையும் = இந்த பதினான்கு உலகங்களையும் 

பூத்தவண்ணம் = எப்படி மலர வைத்தாயோ 

காத்தவளே = அப்படியே காப்பாற்றியவளே. பூ மலர்வது எப்படி ஒரு மென்மையான செயலோ, அது போல் இந்த உலகை எல்லாம் உருவாக்கி, அவற்றை காப்பாற்றுகிறாள்.

பின் கரந்தவளே = பின், மறைத்து வைத்தவளே 


கறைகண்டனுக்கு = திரு நீல கண்டனுக்கு 

மூத்தவளே = மூத்தவளே. சிவனுக்கு மூத்தவள்

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே = என்றுமே மூப்பு அடையாத திருமாலுக்கு இளையவளே 

மாத்தவளே = மா தவம் செய்தவளே 

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே = உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வணங்குவது ஏன் ?

இந்த பாடலுக்கு உரை எழுதிய பெரியவர்கள், பாடலில் முரண் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது எப்படி சிவனுக்கு மூத்தவளாகவும் , திருமாலுக்கு இளையவளாகவும் இருக்க முடியும் என்பது அவர்கள் வாதம். 

எனக்கு அப்படி தோன்றவில்லை. பட்டரின் பாடலில் முரண் இருக்காது என் எண்ணம்.

பெண் தாயாகவும் இருப்பாள், மகளாகவும் இருப்பாள். எல்லா பெண்ணிலும் அந்தத் தன்மை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அந்த கண்ணோட்டத்தில் இந்தப் பாடலை பாருங்கள்....புது அர்த்தம் தெரியும் 

2 comments:

  1. "கறை கண்டனைக்" காப்பாற்றியதால்: மூத்தவள்.

    அபிராமி அந்தாதி முழுவதுமே, அபிராமியைப் பற்பல கோணங்களில் கண்டு, அன்னியோன்னியமாகப் பாடுவதாலேயே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete