Pages

Friday, June 7, 2013

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப 




எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதை, அவர்கள் நினைத்தபடியே அடைவார்கள்.

யார் அடைவார்கள் ?

தாங்கள் எண்ணியதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை உறுதியாக செய்பவர்கள்.

ஒவ்வொரு குறளும் ஏழு வார்த்தைகள். அதில் தேவை இல்லாத வார்த்தைகளை வள்ளுவர் போடுவாரா ?

இந்த குறளில் எண்ணியாங்கு என்ற வார்த்தை எதற்கு ?

எண்ணிய எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்று சொன்னால் என்ன தவறு வந்து விடும் ?

எண்ணியாங்கு என்ற வார்த்தை ஏதோ சொல்ல வருகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம்.

சில பேர் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைப்பார்கள். பணக்காரன் என்றால்  எவ்வளவு ? பெரிய பங்களா ? சில பல ஏக்கர் நிலம் ? நகை நட்டு ? பேங்க் பாலன்ஸ் ? பில் கேட்ஸ் ஐ விட பணக்காரனாக வேண்டும் .... இப்படி எது எல்லாம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று  நினைத்தார்களோ அப்படி.

நல்லா படிக்கவேண்டும் நினைத்தால் எவ்வளவு ? பள்ளியிலேயே முதல் மாணவன் , மாநிலத்திலேயே முதல் மாணவன், இப்படி எப்படி நினைக்கிறார்களோ.

அதாவது நினைவு, கனவு, குறிக்கோள் பொத்தாம் பொதுவாக இல்லாமல் எது வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அதை அடைய என்ன என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது  எளிது.

திட்டமிட்டால்,, அதன் படி உறுதியாக , அதனை செயல் படுத்த வேண்டும்.

அப்படி உறுதியாக செயல் படுத்தினால், அதை அடைய முடியும்

ஒரு வார்த்தை - எவ்வளவு அர்த்தம்!

No comments:

Post a Comment