நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு
அவ்வையார்.
தமிழ் இலக்கிய உலகை கலக்கிய பெண் புலவர்.
ஆணாதிக்க சமுதாயத்தில், அதிலும், ஆண் புலவர்க்கள் நிறைந்திருந்த அந்த காலத்தில் (ஏன் இந்தக் காலத்திலும் தான்) இலக்கிய உலகை தன் பாட்டால் கலக்கிய பெண்.
மிக மிக எளிமையான பாடல்கள். அர்த்த செறிவு நிறைந்த பாடல்கள். நீங்கள் உங்கள் பள்ளி நாட்களில் இதில் சிலவற்றை படித்தும் இருக்கலாம்.
தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.
வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.
அது எல்லாவற்றிலும் பெரிய வலி. அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?
இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.
பாடல்
இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
பொருள்
இடும்பைக்கு = துன்பத்திற்கு
இடும்பை = இட்டு வியக்கும் பை
இயலுடம்பி தன்றே = இயல்பான இந்த உடல் அல்லவா ?
இடும்பொய்யை = இந்த உடம்பில் நிறைய பொய்களை இட்டு வைத்து இருக்கிறோம். அவற்றை
மெய்யென் றிராதே = மெய் என்று இருக்காதே
இடுங் = இடுங்கள். தானம் இடுங்கள்
கடுக = விரைந்து. உடனே
உண்டாயி னுண்டாகும் = அந்த தானம் செய்யும் குணம் உங்களுக்கு உண்டானால், உங்களுக்கு உண்டாகும். எது ?
ஊழிற் பெருவலிநோய் = விதியால் வரும் பெரிய வலியான மரண நோய்
விண்டாரைக் = வென்றவர்கள், அதை விட்டு விலகியவர்கள்
கொண்டாடும் வீடு = கொண்டாடும் வீடு பேறு உங்களுக்கு உண்டாகும்.
தமிழ் எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள்
இடும்பை = துன்பம்
இடும் பை = இட்டு வைக்கும் பை
இடும் பொய்யை = பொய்யை இட்டு வைக்கும்
இடுங்கள் = தானம் இடுங்கள்
உண்டாயின் உண்டாகும் = தானம் செய்யும் குணம் உண்டானால் வீடு பேறு உண்டாகும்
தானம் இடுங்கள். மரண வலியை வெல்லுங்கள்.
இன்னும் கொஞ்சம் அவ்வையின் பாடல்களை பார்ப்போமா ?
No comments:
Post a Comment