Pages

Tuesday, July 2, 2013

இராமாயணம் - அறம் காக்க ஒருவர் துணையும் இன்றி

இராமாயணம் - அறம் காக்க ஒருவர் துணையும் இன்றி 


அறம் என்பது மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. நம் நூல்கள் எல்லாம் அறத்தைப் பற்றியே பேசுகின்றன.

கீதையில் அறத்தை நிலை நிறுத்த யுகம் யுகம் தோறும் நான் சம்பவிப்பேன் என்கிறான் கிருஷ்ணன்.

குறள் முழுக்க முழுக்க ஒரு அற நூல்.

நம் முன்னோர்கள் நம் வாழ்வை அறம் , பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். அறம்தான் அடிப்படை

இராமாயணத்தில், விராதன் என்று ஒரு அரக்கன். அவன் சீதையை கவர்ந்து செல்கிறான். இராமனும் இலக்குவனும் சடையிட்டு அவனைக் கொல்கிறார்கள் . அந்த அரக்கன் மாண்டு விழுகிறான். அவனுள் இருந்து ஒரு தேவன் சாப விமோசனம் பெற்று எழுகிறான்.

எல்லா அரக்கனுக்குள்ளும் ஒரு தேவன் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான்.

அவன் வெளிப்பட்டு இராமனைப் பற்றி கூறுகிறான்.

இறைவனின் தன்மை பற்றிய மிக உயர்ந்த பாடல்கள்.


எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவனே. உன்னுடைய அருள் பார்வை என்றும் குறையாமல் இருப்பவனே. தாமரை போன்ற கண்களை கொண்ட எம் பெருமானே . அறத்தை காப்பதற்கு ஒருவரின் துணையும் இல்லாமல் காற்று போல அங்கும் இங்கும் திரிந்து, அதை ஒரு கடமை போலச் செய்பவனே என்று புகழ்கிறான்.

பாடல்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!  இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,  நீயேயோ கடவாய்தான்?


பொருள் 



புறம் காண = எல்லாவற்றிற்கும் வெளியில் காணக் கிடைப்பவனே

அகம் காணப் = எல்லாவற்றிற்கும் உள்ளேயும் காணக் கிடைப்பவனே

பொது முகத்தின் = உயர்ந்தவன், தான்ழ்தவன், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பொதுவாக நோக்குபவனே


அருள் நோக்கம் இறங்காத = என்று அருள் பார்வை குறையாத

தாமரைக் கண் எம்பெருமாஅன்! = தாமரை போன்ற கண்களை கொண்ட எம்பெருமானே

இயம்புதியால் = சொல்லப்போனால்

அறம் காத்தற்கு = அறத்தை காக்க

உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி = உனக்கு ஒருவர் துணையும் இன்றி

கறங்கு ஆகும் எனத் திரிய = காற்றைப் போலத் திரிந்து

நீயேயோ கடவாய்தான் = நீயே அதை உன் கடமையாகக் கொண்டாய்

காக்கக் கடவிய நீ காவாதிருத்தக்கால்
   யாருக்குப் பரமாம் ..

என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் கூறுவார் (காக்க வேண்டிய கடமை உள்ள நீ காக்கா விட்டால், யாருக்குப் பிரச்சனை என்று முருகனை கேட்க்கிறார்)
 


No comments:

Post a Comment