Pages

Tuesday, July 2, 2013

திருக்குறள் - அன்பு, கொடுப்பதும் பெறுவதும்

திருக்குறள் - அன்பு, கொடுப்பதும் பெறுவதும் 


அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர்கள் எல்லாம் தனக்கு வேண்டும் என்று விரும்புவார்கள். அன்பு உள்ளவர்கள் தங்களுடைய எலும்பு கூட பிறருக்கு வேண்டும் என்று நினைப்பார்கள்.

இது மேலோட்டமான அர்த்தம்.

சற்று ஆழமாக சிந்திப்போம்.

நாம் ஒருவரை காதலிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம் என்றால் என்ன அர்த்தம் ?

அவர்களின் அன்பு நமக்கு மிக மிக அவசியமான ஒன்று. அவர்களின் அன்போ காதலோ இல்லாமல் நம்மால் வாழ முடியாது (நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை) என்று தான் நாம் சொல்வோம்.

வள்ளுவர் அது தவறு என்கிறார்.

உன் அன்பை எனக்குத் தா, உன் காதலை எனக்குத் தா, உன் அருகாமை வேண்டும், உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், உன் குரலை கேட்க வேண்டும் என்பது அன்பு அல்ல.

அன்பு என்பது வேண்டுவது அல்ல. அன்பு என்பது தா தா என்று கேட்பது அல்ல.

அன்பு என்பது கொடுப்பது.

அன்பு என்பது பிச்சை எடுப்பது அல்ல - உன்னைத் தா, உன்னை எனக்கு மட்டும் தா என்று யாசகம் கேட்பது அல்ல.

எல்லாவற்றையும் எடுத்துக் கொள், என் எலும்பைக் கூட.

சொல்லப் போனால் வள்ளுவர் அன்பு என்பது கொடுப்பது என்று கூட சொல்லவில்லை..தன் உடமை எல்லாம் அன்பு செலுத்துபவர்களுக்கு உரிமை ஆக்கி விடுவது.

நான் கொடுப்பது என்ற பேச்சே அல்ல...என்னை உனக்கு உரிமை ஆக்கி விட்டேன். எப்போது வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று விடுவது.

சில பேர் மனைவியோ, கணவனோ, காதலியோ, காதலனோ பணம் காசு கேட்டால் கொடுத்து  விடுவார்கள், வீடு வாசல் வேண்டுமா எடுத்துக் கொள், வண்டி வேண்டுமா  எடுத்துக் கொள் ....ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே...தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்பார்கள்.

அன்பு என்பது எலும்பையும் தருவது.

அது என்ன எலும்பையும் தருவது...?

அன்பு என்பது பிரதி பலன் எதிர் பாராதது.....எலும்பை கொடுத்து விட்டால் திரும்பிப் பெற என்ன இருக்கும் ? பதிலுக்கு எதையும் எதிர் பாராமல் தருவது அன்பு.

அது என்ன எலும்பு மட்டும் ?

என்பு"ம்" உரியர் பிறர்க்கு. எலும்பு உரியர் என்று சொல்லவில்லை....எலும்பும் உரியர் என்று சொன்னார்...அப்படி என்றால் மத்ததும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர் அதே போல் கேட்டுப் பெற மாட்டார்கள்..எல்லாம் தனக்கு உரியர்...எல்லாமே தனக்கு உரிமையானது என்று நினைப்பார்கள்.

இதையே கொஞ்சம் பிரித்து பொருள் பார்க்கலாம்....

"அன்புடையார் எல்லாம் " அதாவது அன்பு இல்லாதவர்கள் எல்லாம்

"தமக்கு உரியர்" அவர்களுக்கு அவர்களே உரியவர்கள். அவர்களால் மற்றவர்களுக்கு ஒரு  பிரயோஜனமும் கிடையாது. அன்பிலாதவர்கள் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கொள்ளும் சுயநல வாதிகள்.

அவர்கள் மட்டும்தான் அவர்களுக்கு உரியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே கிடையாது.



 


2 comments: