இராமாயணம் - ஆசைக் கடல் , அன்பு அலை
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்,
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான்.
சீதையை முதன் முதலாகப் பார்க்கிறான் இராவணன்.
காட்டில், குடிசையில், தனிமையில்.
மலை போல் பெரிய கரிய யானைக்கு மத நீர் சுரக்கும். அது போல இராவணனுக்கு ஆறாக வியர்க்கிறது.
சீதை மேல் ஆசை கடல் அலை போல புரள்கிறது. ஒன்றை அடுத்து ஒன்றாக அலை அலையாக வருகிறது.
எல்லோரும் அழகாய் இருக்க அணிகலன் அணிவார்கள். ஆனால் சீதையோ அந்த அழகுக்கு அணிகலனாய் இருக்கிறாள். எல்லா புகழும் ஒன்றாய் கொண்டவளை, கற்பினுக்கு அரசியை கண்ணால் கண்டான்.
எல்லோரும் கண்ணாலதான் காண்பார்கள். அது என்ன கண்ணால் கண்டான் ?
இது வரை மனதால் கண்டான். சூர்பனகை சொன்ன குறிப்புகளை வைத்து சீதை இப்படித்தான் இருப்பாள் என்று மனதில் ஒரு வடிவம் வரைந்து வைத்து இருந்தான்.
இப்போது நேரில் நிற்கிறாள். அவளைக் கண்ணால் கண்டான்.
பொருள்
வெற்பிடை = வெற்பு என்றால் மலை. மலை போன்ற யானைகளிடம்
மதம் என = அதிகமாக சுரக்கும் மதன நீர் போல
வெயர்க்கும் மேனியன் = வியர்வை பொங்கும் மேனியன்
அற்பின் = அன்பினால்
நல் திரை = நல்ல அலை
புரள் = புரண்டு புரண்டு வரும்
ஆசை வேலையன் = ஆசையைக் கடல் போல் கொண்டவன் (வேலை என்றால் கடல்). ஆசை எனும் கடல், அதில் அன்பு எனும் அலை....கடல் தனது அலை எனும் கரங்களால் தொட முயல்வது போல
பொற்பினுக்கு அணியினை = அழகுக்கு அணியினை
புகழின் சேக்கையை = புகழின் தொகுப்பை
கற்பினுக்கு அரசியை = கற்புக்கு அரசியை
கண்ணின் நோக்கினான் = கண்ணால் கண்டான். முதன் முதலாக கண்ணால் கண்டான்.
இந்த அளவு கம்பர் இந்தச் சந்திப்பைப் பற்றி எழுதியிருக்கிறாரா!
ReplyDeleteஇந்த அளவு மட்டும் அல்ல, இன்னமும் எழுதி இருக்கிறார்...
ReplyDelete