பிரபந்தம் - காதல் அன்றி வேறெதுவும் இல்லை
உலகம் முழுதும் காதல் அன்றி வேறில்லை. அன்புதான்,காதல்தான் எங்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
இங்கே அன்பின்றி வேறொன்றும் இல்லை.
அன்பே சிவம்.
பூதத்தாழ்வார் திருவேங்கிட மலைக்குப் போகிறார். போகிற வழியில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் காதல் வயப்பட்டு நிற்கின்றன.
ஆண் யானை, பெண் யானை மேல் காதல் கொண்டு அருகில் இருந்த மூங்கில் மரத்தில் இருந்து மூங்கிலை முறித்து, அதை அப்படியே உண்டால் சுவைக்காது என்று, அருகில் உள்ள தேன் அடையில் அதை நனைத்து பெண் யானைக்கு ஊட்டுகிறது. வானின் நிறம் கொண்ட திருமாலின் மலை அப்படிப் பட்டது.
நாவுக்கரசரும் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்....
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவதைப் பார்த்தேன், அவனுடைய பாதங்களைப் பார்த்தேன், இதுவரை காணாத ஒன்றை கண்டேன் என்கிறார்.
காதல் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது ? இதை ஏன் பூதத்தாழ்வார் பெரிதாக சொல்கிறார் ?
இறை அனுபவத்திற்கு முந்தைய அனுபவம் காதல் அனுபவம்.
நான் என்பது அற்றுப் போகும் அனுபவம்.
நான் என்பது கரைந்து, ஆனந்தமான ஒரு புள்ளியில் நிறுத்தும் அனுபவம் காதல் அனுபவம்.
நாயகன் நாயகி பாவம் பக்தி இலக்கியத்தில் எங்கும் காணக் கிடைக்கிறது. அது ஏதோ சிற்றன்ப உணர்சிகளை தூண்ட எழுதப் எழுதப் பட்டவை அல்ல.
ஆண் பெண் கலந்த அந்த உணர்ச்சி இறை சன்னிதானத்திற்கு இட்டுச் செல்லும்.
போகத்தின் உச்சியில் யோகம் பிறக்கும்.
உடலின்பத்தை மறக்கவோ மறுக்கவோ முடியாது.ஆனால் அதைத் தாண்டி போக முடியும்.
பாடல்
பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை
பொருள்
பெருகு = பெருகி வரும்
மத = மதன நீர்
வேழம் = ஆண் யானை
மாப் பிடிக்கு = பெரிய பெண் யானைக்கு
முன் நின்று = முன்னால் நின்ற
இரு கண் = இரண்டு கண்கள் (இது மனித கண்கள் அல்ல. மூங்கிலில் உள்ள கணுக்கள்)
இளமூங்கில் வாங்கி = இளமையான மூங்கிலை உடைத்து எடுத்து
அருகு இருந்த = அருகில் இருந்த
தேன் கலந்து நீட்டும் = தேனில் தோய்த்து நீட்டும்
திருவேங்கடம் கண்டீர் = திருவேங்கிட மலையைப் பார்த்தீர்களா
வான் கலந்த வண்ணன் வரை =அது யாரோட மலை தெரியுமா ? வானின் நிறம் கொண்ட அஞ்சன வண்ணனின் மலை
இந்தக் காட்சி இயற்கையாக நிகழ்வது. இதில், திருமாலுக்கு என்ன பெருமை?!
ReplyDeleteஎப்படி விளக்குவது ? பக்தி உணர்வு என்பது அன்பின் அடுத்த படி. அன்பு என்பது அருளாக மாறுகிறது. அருள் என்பது கருணையாக பரிமளிக்கிறது கருணை பக்தியாக வெளிப்படுகிறது.
ReplyDeleteஇயற்கை தான் இறை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை